மத்திய உள்துறைச் செயலாளர் சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் வருகின்ற 15ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், மத விழாக்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்பாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்தது.
அதன்படி, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலையை வைப்பதற்கு அனுமதி இல்லை எனவும், விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்படாது எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ காந்தி விநாயகர் சதுர்த்திக்கு தளர்வுகள் வழங்க கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த, அமைச்சர் சேகர்பாபு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதிக்கக்கூடாது என மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட திருவிழாக்களை வீட்டிலேயே கொண்டாடுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய உள்துறைச் செயலாளர் சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார்.