சர்வாதிகார போக்குடன் சிலர் கூறும் அறிவுரைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என நிதி அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது … அரசியல்வாதிகளுக்கு கொள்கைகளை தாண்டி மனிதாபிமானமும் திறமையும் அவசியமான ஒன்றாகும். மத்திய சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளேன்.
கடந்த ஆட்சியில் தகுதி வாய்ந்த, பரிந்துரை செய்த ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆட்சியில் மனிதாபிமானத்தோடு மக்களுக்கு விரைவாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் 3-வது முறையாக நடைபெற்று வருகின்றன. சிறந்த முறையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயலாற்றி வருகிறார். இந்த அரசுக்கு சிறந்த பொருளாதார நிபுணர்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பிரதமரின் தலைமை ஆலோசகராக இருந்தவர்கள், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்று சிறந்த பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. யார் நல்ல ஆலோசனைகளை கூறினாலும் இந்த அரசு அதன்படி கேட்டு நடக்க தயாராக இருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியில் சர்வாதிகார போக்குடன் எங்களுக்கு தான் எல்லாம் தெரியும், நாங்கள் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்ற மனோபாவத்துடன் சிலர் எங்களுக்கு கூறும் அறிவுரைகளை நாங்கள் ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.