• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வாழ்ந்து தான் போராட வேண்டும்… உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் – முதல்வர் வேண்டுகோள்

Byமதி

Nov 26, 2021

பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் நடக்கும் அத்துமீறல்கள் முடிவுக்கு வந்த பாடில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களால் தற்கொலை செய்வது என்பது அனைவரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தைகள் யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாளை முன்னிட்டு வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த காணொலியில் அவர் கூறியிருப்பதாவது, “சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது.

அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது! விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது. பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில் பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் சில சம்பவங்கள்தான் வெளியில் வருகிறது. மற்றவை அப்படியே மறைக்கப்படுகிறது.

அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் தலைவர் கலைஞர், ஒரு படத்தில், “மனச்சாட்சி உறங்கும் சமயம் பார்த்துத்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது” என்று எழுதினார். அப்படி மனச்சாட்சியற்ற மனிதர்களால் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும், பண்பாட்டையும் பற்றிப் பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனைத் தடுக்க முடியாது.

உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகச் செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. அந்தச் சட்டங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இத்தகைய நபர்கள் கடுமையாக கண்டிக்கப்படுவார்கள் என்று நான் இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன்.

இப்படியான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன் வர வேண்டும். பள்ளியின் ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியரிடம், பெற்றோர்களிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகத்திடம் புகார்களைத் தர வேண்டும். அந்தப் புகார் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களும் தயங்கக் கூடாது.

புகாரை வாங்கினால் பள்ளியின் பெயர் கெட்டுப் போகும் என்று பள்ளி நிர்வாகமும், தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தவறாகப் பேசுவார்கள் என்று பெற்றோரும் நினைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாக ஆகிவிடும்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார். உடல் வலியோடு உள்ளத்து வலியும் ஏற்படுகிறது. அவமானம் அடைகிறார். ஊக்கம் குறைகிறது, நம்பிக்கை தளர்ந்து போகிறது, சக மனிதர்கள் மீதே வெறுப்பு வளர்கிறது, ஆண்கள் மீதே கோபம் அதிகம் ஆகிறது, கல்வியிலோ வேலையிலோ கவனம் செலுத்த முடியாதவராக ஆகிறார். அந்தப் பெண்ணின் அனைத்துச் செயல்பாடுகளுமே இதனால் தடைபடுகிறது. அவரது எதிர்காலமே கேள்விக்குறியாகிறது.

இத்தகைய சரிவுகளில் இருந்து பெண் குலத்தை காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இதை மற்ற அனைத்துப் பிரச்னைகளையும் விட மிக முக்கியமான பிரச்னையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது. பாலியல் தொல்லைகள், சீண்டல்கள் குறித்த புகார்கள் வந்ததும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீங்களே கடந்த சில நாட்களாக அதனைச் செய்திகளில் பார்த்துக்கொண்டு வருகிறீர்கள். உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தர இந்த அரசு தயங்காது.

  • குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
  • அதேபோல் சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கல்வித் தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் பயிற்சி பெற்ற நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். பாலியல் வன்முறை தொடர்பாக மாணவர்களிடம் இருந்து பெறப்படும் புகார்களுக்கு, தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  • குழந்தைகளின் பாதுகாப்பினை பள்ளிகள் உறுதி செய்ய சுய தணிக்கைப் பட்டியல் பள்ளிக் கல்வித்துறையால் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்தடுப்பு பிரிவு தலைமையகத்தில் இணையதளக் குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) காவல்நிலையம் அமைக்கப்பட்டு காவல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக நிதியம் ஒன்று செயல்படுகிறது.

  • போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் முறையாகச் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 16 மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைந்துள்ளது. மேலும், 4 மாவட்டங்களில் நிறுவ ஆணையிடப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்து உண்மைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர உத்தரவிட்டுள்ளேன்.
  • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
  • குழந்தைப் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்படுவதற்கு, இந்தியாவிலேயே முதன்முதலாகத், தமிழ்நாடு மாநில குழந்தை பயிற்சி மையம் யுனிசெப் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
  • குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் அனைத்து பாடப்புத்தகங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான மாணவர் உதவி எண் 14417 குறித்த விழிப்புணர்வுச் செய்தி வரும் கல்வியாண்டிலிருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும்.
  • சில நாட்களுக்கு முன்னால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், குழந்தைகளுக்கான கொள்கை – 2021 என்ற கொள்கைக் குறிப்பேட்டை தலைமைச் செயலகத்தில் நான் வெளியிட்டேன். ஒவ்வொரு குழந்தையையும் அனைத்துவிதமான சுரண்டல்களில் இருந்தும் வன்முறைகளில் இருந்தும் காக்கும் அறிக்கையாக அது அமைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்காக பாதுகாப்பு அதில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசு காட்டும் அதே அக்கறையை பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும் காட்ட வேண்டும். தங்களிடம் பயிலும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்தாக வேண்டும். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோடு எளிமையாகவும் இனிமையாகவும் பழக வேண்டும். ஒரே வீட்டுக்குள் தனித்தனித் தீவுகளாக வாழ வேண்டாம்.

அன்புக் குழந்தைகளே… உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதல்-அமைச்சராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம் சாட்டிவிட்டு மரணம் அடைகிறார் என்று பொருள். வாழ்ந்துதான் போராட வேண்டும். வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக, உங்கள் சகோதரனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக் கொள்கிறேன். உங்களை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம், நான் இருக்கிறேன், அரசாங்கம் இருக்கிறது.”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.