

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயக்குமார் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்சனான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேறினர். மூன்றாவது வாரத்தில் டபுள் எவிக்ஷனாக ஷாரிக் மற்றும் அபினய் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
நிகழ்ச்சி துவங்கி முதல் நாளில் இருந்தே வனிதா மற்ற போட்டியாளர்களுடன் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தார்.. இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற போட்டியாளர்களும் வனிதா மீது அதிருப்தியில் இருந்து வந்தனர்.
முதல் வாரத்திலேயே வனிதாவிற்கு தான் குறைவான ஓட்டுக்கள் இருந்ததாகவும், அதனால் முதல் ஆளாக அவர் தான் வெளியேறுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் டிரெண்டிங் பிளேயர், கேப்டன் என பல காரணங்களைக் கூறி வனிதாவை காப்பாற்றி வந்தார் பிக்பாஸ்.
முதல் இரண்டு வாரங்களில் சண்டை போட்ட வனிதா, மூன்றாவது வாரத்திலேயே பிக்பாசிடம் புலம்பி, கண்ணீர் விட்டு அழுகும் நிலை ஏற்பட்டு விட்டது. தாமரை மற்றும் பாலாவுடன் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்டு வந்த மோதல் போக்கு தான் இதற்கு காரணம். நிம்மதியாக சாப்பிடக்கூட முடியவில்லை என புலம்பி அழுதார் வனிதா. இதை பார்த்து ரசிகர்களே ஆச்சரியப்பட்டு வருகின்றனர். வனிதாவே அழுகிறாரா என கேட்டு வந்தனர்.
இந்நிலையில் லேட்டஸ்ட் அதிர்ச்சி தகவலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதுமே நெட்டிசன்கள், அப்படியானால் இனி யார் கன்டென்ட் கொடுப்பது. யார் சண்டை போடுவதை நாங்கள் பார்ப்பது என கேட்டு வருகின்றனர். அதே சமயம், தற்போது அவர் வெளியே சென்று சில எபிசோட்களை பார்த்து விட்டு மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே அழைத்து வரப்படுவார் என்றும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.