• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அன்னை தெரசா அறக்கட்டளை முடக்கப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்

நோபல் பரிசுபெற்ற அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட, ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிடிஸ் ‘ என்ற அறக்கட்டளை மருத்துவ,சுகாதார சேவை பணிகளில்புகழ் பெற்றது.


இதனால்தான் தெரசா இந்திய மக்களால் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படிருக்கின்றன என்றும் இதனால் சுமார் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருவதாகவும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (டிசம்பர் 27) தனது ட்விட்டர் மூலம் அதிர்ச்சி தெரிவித்தார். அவர் மேலும் , “ சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது”என்றும் கூறினார். கிறிஸ்துமஸ் சமயத்தில் இந்த செய்தி பரவி இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇந்த நிலையில் நேற்று (டிசம்பர் 27) இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஓர் விளக்கம் அளித்துள்ளது.

“நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவால் அமைக்கப்பட்ட கத்தோலிக்க மத சபையான மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டியின் (MOC) வெளிநாட்டு நிதி மற்றும் நன்கொடைகளைப் பெறுவதற்கான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) சட்டத்தின்படியான உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. வெளிநாட்டு நிதிகள் அல்லது நன்கொடைகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) பதிவு செய்வது கட்டாயமாகும்.

அன்னை தெரசா அறக்கட்டளையின் FCRA விண்ணப்பம் அங்கீகரிக்கப்படாததால், அதனுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் இயக்கப்படவில்லை. டிசம்பர் 13 அன்று அன்னை தெரசா அறக்கட்டளை தாக்கல் செய்த 2020-21 ஆண்டு நிதி அறிக்கையின்படி, 347 வெளிநாட்டு நபர்கள் மற்றும் 59 நிறுவனநன்கொடையாளர்களிடமிருந்து 75 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. முந்தைய ஆண்டிலிருந்து அதன் FCRA கணக்கில் 27.3 கோடி இருப்பு இருந்தது மற்றும் மொத்த இருப்பு 103.76 கோடியாக இருந்தது.

தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததற்காக டிசம்பர் 25 அதாவது கிறிஸ்துமஸ் அன்று அறக்கட்டளையின் FCRA புதுப்பித்தல் மறுக்கப்பட்டது. இந்த புதுப்பித்தலை மறுபரிசீலனை செய்ய மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி (MOC) யிடமிருந்து கோரிக்கை,மறுசீரமைப்பு விண்ணப்பம் எதுவும் பெறப்படவில்லை”என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அன்னை தெரசா அறக்கட்டளையின் சுப்பீரியர் ஜெனரல் என்று அழைக்கப்படும் தலைவி எம். பிரேமா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் FCRA புதுப்பித்தல் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தவறில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை எஃப்சி (வெளிநாட்டு பங்களிப்பு) கணக்குகள் எதையும் இயக்க வேண்டாம் என்று எங்கள் மையங்களை கேட்டுக் கொண்டுள்ளோம்”என்று கூறியுள்ளார்.மேலும், “எங்கள் அறக்கட்டளையின் FCRA பதிவு இடைநிறுத்தப்படவில்லை அல்லது ரத்து செய்யப்படவில்லை. மேலும், எங்கள் வங்கிக் கணக்குகள் எதுவும் உள்துறை அமைச்சகத்தால் முடக்கப்படவும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.