சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அதிமுகவின் விருதுநகர் மேற்கு ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ராஜாக்கனி 28. இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வடப்பட்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது ராஜாக்கனிக்கும் அதே ஊரை சேர்ந்த வீரசிங்கம் என்ற இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் ராஜாக்கனியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி நேற்று இரவு வீரசிங்கம் ராஜாக்கனியை மது அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தில் நாகலாபுரம் சாலையில் உள்ள கல்யாண மண்டபம் அருகே நெல் களத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 7 பேருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது கோயில் திருவிழாவின்போது தன்னை தாக்கிய ராஜாக்கனியை அடிக்க வேண்டும் என்று வீரசிங்கம் கூறியுள்ளார்.

உடனே மதுபோதையில் இருந்த வீரசிங்கம் மற்றும் அவரது நண்பர்களான மாரீஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் ராஜாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது தப்பி மெயின்ரோட்டிற்கு ஓடிய ராஜாக்கனியை விரட்டி சென்று பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். உயிருக்கு போராடிய ராஜாவிற்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி சென்று ராஜபாளையம் பகுதியில் பதுங்கியிருந்த வடபட்டியை சேர்ந்த முத்தீஸ்வரன் , முத்துக்கருப்பன் மாரீஸ்வரன் வீரசிங்கம் சதீஷ்குமார் , ஈஸ்வரன் வேல் மாரீஸ்வரன் ஆகிய 7 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து திருத்தங்கல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கோவில் திருவிழாவின்போது வீரசிங்கத்தை ராஜாக்கனி தாக்கியதால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு வந்த நிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதாக நாடகம் நடத்தி எனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாக்கனியை கொலை செய்ததாக வீரசிங்கம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவிழாவில் நடைபெற்ற சிறிய தகராறு கொலையாக மாறியது அக்கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.