சங்கரன் கோவில் அருகே சீரான குடிநீர் வசதி வேண்டும் என கிராமமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் பணவடலிசத்திரம், தெற்கு பனவடலிசத்திரம் சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதமாக சீராக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமலாபுரம் விலக்கு பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அவர் அங்கு இருந்து சென்றார். பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆதிநாராயண உள்ளிட்டோர் போராட்டக்காரர்கள் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மூன்று நாட்களுக்குள் உடனடியாக உங்களது தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக நம்பிக்கை அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காலை முதல் மதியம் வரை பேச்சியம்மன் கோவில் வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் கிராம மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.