• Wed. Dec 11th, 2024

அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!

Byவிஷா

Sep 30, 2023
விருதுநகர் தென்காசி வழித்தடத்தில் அக்டோபர் 1 முதல் பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் - தென்காசி, தென்காசி - நெல்லை மற்றும் தென்காசி - செங்கோட்டை அகல ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விருதுநகர் முதல் தென்காசி வரை மற்றும் தென்காசி முதல் செங்கோட்டை வரையிலான ரயில் பாதைகளில் மின் கம்பிகள் நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 13ம் தேதி இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று இதற்கான சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பாதையில் விரைவில் மின்சார ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் வரும் அக்டோபர் 1 முதல் பொதிகை மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.