பாஜகவில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாததால் வருத்தத்தில் உள்ள விஜயதரணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் விலகி பாஜகவில் சேர்ந்தார். தனக்கு பாஜகவில் உரிய அங்கீகாரமும், பொறுப்பும் கிடைக்கும் என்று விஜயதரணி காத்திருந்தார். ஆனால், பாஜகவில் அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் தற்போது பாஜகவில் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளார். இதனால் விஜயதரணி மனஉளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு அமைக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த விஜயதரணி, விஜய் தான் அடுத்த முதல்வர் என்று கூறி அவரது கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக விஜயதரணி கூறுகையில்,” நடிகர் விஜயை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் சில அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. விஜய் வரும் தேர்தலில் சரியான கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கலாம். அப்படி கூட்டணி அமைக்க முடியாவிட்டால் வாக்குகளைப் பிரிக்கும் பல கட்சிகளில் ஒன்றாகவே தவெக இருக்கும் . 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் களம் பலமுனை போட்டியாக இருக்கும்” என்று கூறியுள்ளார். பாஜகவில் இருந்து கொண்டு விஜயதரணி இப்படி பேசியதற்கு அவரது கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி விஜயதரணி நடிகர் விஜயின் தவெகவில் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.