

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள ஏரிகள், அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மதுரையில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 15 கிராமங்களுக்கு சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர் மழையால் நீர் வேகமாக நிரம்பி வருவதால் புழல் ஏரியிலிருந்து இன்று காலை 11 மணிக்கு 500 உபரிநீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சாமியார்மடம், வடகரை, வடபெரும்பாக்கம், மணலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது. செம்மரம்பக்கம் ஏரியில் நீர் திறக்கப்படுவதால் குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது பெய்துவரும் கனமழை, மேலும் 3 மணி நேரத்துக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
