• Wed. Jan 22nd, 2025

இன்று துணை ஜனாதிபதி தேர்தல்: மாலையில் முடிவு தெரியும்

ByA.Tamilselvan

Aug 6, 2022

துணை ஜனாதிபதி இன்று நடக்கிறது இதற்கான முடிவுகள் மாலை தெரிய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டின் தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது. அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந் தேதி) நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில், பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 788 பேர் ஓட்டு போடுகிறார்கள். எனவே ஓட்டுப்பதிவு டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் மட்டுமே நடைபெறும். இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளராக மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் (71) நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா (80) போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிட்டாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை புறக்கணிப்பது அவருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து பா.ஜ.க. கூட்டணிக்கு பெரும்பான்மை எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் அந்த கூட்டணியில் இடம்பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம் கட்சிகளும், பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெறுவது உறுதி. வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. எனவே புதிய துணை ஜனாதிபதி யார் என்பது இன்று மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.