• Wed. Apr 24th, 2024

மன்மத லீலை அனுமதி வாங்காமலே தலைப்பை அறிவித்த வெங்கட்பிரபு

தங்களின் படங்களுக்கு நல்லதொரு பொருத்தமான தலைப்புக்கான பெயரை வைப்பதற்கு யோசிக்க முடியாத வாழைப்பழ சோம்பேறிகள், சிந்திக்கும் திறன் அற்றவர்கள்
புகழ் பெற்ற பழைய படங்களின் பெயர்களை விலைக்கு வாங்கி படங்களை தயாரிக்கும்போக்கு தமிழ்த் திரையுலகத்தில் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதனால், அந்தப் பழைய படங்களின் தகவல்கள், புகைப்படங்கள்கூட இணையத்தில் கிடைக்காத சூழலும் தற்போது ஏற்பட்டுள்ளது.இதனாலேயே, “பழைய படங்களின் பெயர்களில் புதிய படங்களை உருவாக்க வேண்டாம். பழைய படங்களின் தலைப்புகளையும் யாருக்கும் கொடுக்காதீர்கள்” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதையெல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் பழைய படங்களின் பெயர்களில், புதிய படங்களைத் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இப்போது ‘மன்மத லீலை’ என்ற பெயரில் தான் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது இவர் இயக்கும் 10-வது படமாகும்.இந்த ‘மன்மத லீலை’ திரைப்படம் 1976-ம் ஆண்டு வெளியானது. கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படமாகும்.

இன்றுவரையிலும் இயக்குநர் கே.பி.யின் சிறந்த படங்களில் ஒன்றாகவும், கமல்ஹாசனுக்கு நடிப்புத் திறமைக்கு ஒரு சான்றாகவும் இத்திரைப்படம் இருந்து வருகிறது.இப்போது இந்தப் படத்தின் பெயரிலேயே புதிய படத்தை வெங்கட் பிரபு அறிவித்திருப்பது தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

மேலும் இப்போதுவரையிலும் இந்தத் தலைப்பினைப் பயன்படுத்துவதற்கு கலாகேந்திரா தயாரிப்பு நிறுவனத்தின் குடும்பத்தாரிடம் அனுமதியே வாங்கவில்லையாம். அனுமதி வாங்காமலேயே எப்படி டைட்டிலை அறிவிக்கலாம் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் குடும்பத்தினர் தற்போது வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இனிமேல் கேட்டாலும் இந்தக் கிளாஸிக் படத்தின் தலைப்பைத் தருவதாக இல்லையாம்..!
ஆக.. படத்தின் அறிவிப்பிலேயே பிரச்சினை துவங்கிவிட்டது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *