• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இடிந்து விழும் நிலையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபம்.., நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்..!

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபத்தில் அடிப்படை வசதி இல்ல. எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில் இருக்கின்றோம். இந்தியப் பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பிறந்தநாள் வாழ்த்தெல்லாம் கூறுகிறார். அந்த நினைவுமண்டபத்தைப் பார்க்க, பராமரிக்க யாருமே முன்வரவில்லையே என்று புலம்பித் தவிக்கிறார்கள் சிவகங்கைச் சீமை பொதுமக்கள்.
இப்படி ஒரு கடிதம் நமது அரசியல் டுடே அலுவலகத்திற்கு வர, உடனே அந்த நினைவுமண்டபத்தில் ஆஜரானோம்.


அங்கு சென்றதுமே பரிதாப நிலையில், கண்களுக்கு ஒரு கண்ணாடி, நெத்தியில் ஒரு நாமம், ஆன்மிகவாதியாக நம் கண்ணில் தென்பட்ட ஒருவரை நெருங்கி, ஐயா, நினைவுமண்டபம் இடிந்து விழுகிற மாதிரி இருக்கு என்று எங்கள் அரசியல் டுடே அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் மனுவை அனுப்பி இருக்கிறார்களே இது உண்மையா? அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வியை முன்வைத்தோம்.


நம்மை ஏறெடுத்துப் பார்த்த கண்ணில் நீர் ததும்பியபடி, ஆமாய்யா, பொதுமக்கள் கண்டிப்பா புகார் கொடுத்திருப்பாங்க. நான்தான் இந்த வீரப்பேரரசி வேலுநாச்சியார் நினைவுமண்டபத்தின் பூசாரி ரவிக்குமார் என்று அவரை நம்மிடம் அறிமுகப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார் ரவிக்குமார்..,
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தொண்டாற்றி வருகிறேன்.

வீரமங்கை வேலுநாச்சியாரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு வீரத்தைப் பறைசாற்றி ஆங்கிலேயரை தன் கால் பெரு விரலால், தன் வீரத்தால் எட்டி உதைத்து விரட்டியடித்த தமிழ்நாட்டினுடைய சிவகங்கையின் சொத்து வீரப்பெண்மணி வேலுநாச்சியார். இவரைப் பற்றி சுருக்கம் இதைச் சொன்னாலே போதும். அப்படி பேர் புகழ் பெற்ற இந்திய வீரப்பெண்மணிக்கு (ஜன.3) 292வது பிறந்தநாள்.

அது அனைவருக்குமே தெரிந்த விசயம்தான். இந்தப் பிறந்ததினத்தில் இந்தியப் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் புகழாரம் பாடி, எங்கள் சிவகங்கை வீரமண்ணையும், எங்களது வீரத்தமிழச்சியையும் போற்றிப் புகழ்ந்து பிறந்தநாளில் டுவிட்டரில் வாழ்த்திப் புகழாரம் வெளியிட்டிருக்கிறார். இப்படி இந்த 292வது பிறந்ததின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியாருக்கு புகழாரம் பாடியதோடு மட்டுமல்லாமல், சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை நேரில் அனுப்பி மணிமண்டபத்திற்கு நேரில் சென்று வணங்கி வாருங்கள் என்று கட்டளையும் இட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநில பா.ஜ.க துணைத்தலைவர், சட்டசபை பா.ஜ.க தலைவருமான நயினார்நாகேந்திரன் ஆகியோரும் வந்து வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபத்திற்கு வந்து மரியாதை செலுத்தினர்.

இது எங்களுக்கும், எங்கள் மண்ணிற்கும்தான் பெருமை. இப்படிப் பிரசித்தி பெற்ற வீரமங்கை வேலுநாச்சியாரை இந்திய நாடே போற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரது நினைவுமண்டபம் எப்படி இருக்கு தெரியுமா? என்று கண்ணீர் விட ஆரம்பித்தார் ரவிக்குமார்.,
சிவகங்கை அரண்மனை அருகாமையிலேயே வீரமங்கை வேலுநாச்சியார் பாழடைந்த மண்டபம் போல் பரிதாபமாகக் காட்சி அளித்துக் கொண்டிருப்பதுதான் எங்களது மண்ணையும், மனதையும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. முகப்பில் சமுதாயக்கூட தரைகளும், மேற்கூரைகளும் சேதமடைந்திருக்கின்றன.

மழைக்குத் தாங்காத மேற்கூரைகள், அதன் மேல் உள்ள நினைவுமண்டபமும் வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகளே இல்லாமல் பரிதாபமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. நினைவுமண்டபத்தைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு குடிப்பதற்கு கூட குடிதண்ணீர் வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லை. இதை விட பெரிய கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா, இந்த நினைவுமண்டபத்துல கடந்த 10 ஆண்டுகளா மின்சார வசதி இல்லன்னா பார்த்துக்கங்களேன் என்று மளமளவென மேலும் பொங்கி கொதித்தார் ரவிக்குமார்.


நான் இந்தத் தொண்டுக்கு வர்றதுக்கு முன்னாலேயே 10 வருஷமா மின்சார வசதி இல்லை. இதை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகிறது. நகராட்சியிலும் மனு கொடுத்து விட்டோம். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இக்குற்றச்சாட்டுகள் குறித்து நகராட்சி ஆணையர் கண்ணனிடம் பேசிய போது..,
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பியாக இருந்த சுதர்சன நாச்சியப்பன் அவரது எம்.பி. நிதியில் சமுதாயக் கூடத்தைக் கட்டிக் கொடுத்தார். அப்போது வாய் மொழி வார்த்தைகளாக நகராட்சி நிர்வாகம் இதைப் பராமரித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க எங்கள் நகராட்சி ஊழியர்களும் பராமரிததுக் கொண்டுதான் இருக்கிறோம். கரன்ட் இல்லை, அடிப்படை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை என்ற பிரச்சனையெல்லாம் வீரப்பேரரசி வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பாக எங்களிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றனர். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நானும் பேசியிருக்கின்றேன் என்றார் படபடப்போடு.


மேலும் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியை தொடர்பு கொண்டோம்..,
தொடர்ந்து நம் தொடர்பை துண்டித்துக் கொண்டே இருந்தார். அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபத்திற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று காத்திருந்தது போல், அவரிடம் இருந்து பதில் வரும் என்று நாமும் காத்திருந்தோம். எந்தப் பதிலும் வரவில்லை. அவர் இதுகுறித்துப் பதில் கூறினால், அவர் கருத்தைப் பதிவிடவும் தயாராக இருக்கிறோம்.
புத்துயிர் பெறுமா வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவுமண்டபம்..?