• Tue. May 28th, 2024

வாரிசு – சினிமா விமர்சனம்

Byதன பாலன்

Jan 12, 2023

விஜய் நடிப்பில இருக்கும்66-வது படம் இது.இந்தப் படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு தயாரிப்பாளர்களான தில் ராஜூவும், சிரீஷூம் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா கிரீஷ், சம்யுக்தா, யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், வி.டி.வி.கணேஷ். பரத் ரெட்டி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது.

தமன் இசையமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத் தொகுப்பு செய்துள்ளார். சண்டை இயக்கம் – ராம் லஷ்மண், பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – ஜானி மாஸ்டர், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத். தெலுங்கு இயக்குநர் வம்சி படிபல்லி, ஐஸோ சாலமனுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதி, படத்தையும் இயக்கியிருக்கிறார்.

விஜய்க்கு ஏற்ற திரைப்படம்தான். அதேபோல் தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் மனதில் வைத்து எழுதப்பட்ட திரைக்கதையில் படம் தயாராகியுள்ளது

.இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர் ‘ராஜேந்திரன்’ என்ற சரத்குமார். இவருக்கு 3 மகன்கள். ஸ்ரீகாந்த், ஷாம், விஜய். இவர்களில் ஸ்ரீகாந்துக்கும், ஷாமுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். ஸ்ரீகாந்தின் மனைவி சங்கீதா கிரீஷ். ஷாமின் மனைவி சம்யுக்தா.இந்த நிலையில் விஜய் லண்டன் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுவிட்டு தாயகம் திரும்பியவர் தந்தையின் நிழலில் இருக்க விரும்பாமல் தனித்து செயல்பட விரும்புகிறார். சரத்குமார் அதை விரும்பவில்லை. விஜய்யை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்.

திடீரென்று சரத்குமாருக்கு உடல் நலம் கெடுகிறது. கேன்சர் நோயால் பாதிக்கப்படும் அவர் இன்னும் 1 வருடம்தான் உயிருடன் இருப்பார் என்று மருத்துவரான பிரபு சொல்லிவிடுகிறார். இதே நேரம் சரத்குமாரின் மனைவி சுதா, சரத்தின் 60-வது பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறார்.இதற்காகவே 7 வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார் விஜய். வந்த இடத்தில் சங்கீதாவின் தங்கையான ராஷ்மிகாவைப் பார்த்தவுடன் லவ்வாகிறார் விஜய். 60-வது கல்யாண தினத்தன்று பிரகாஷ்ராஜின் சதி வேலையினால் ஸ்ரீகாந்த், மற்றும் ஷாம் இருவரின் முகமூடிகளும் வந்திருக்கும் விருந்தினர்கள் முன்னிலையில் கிழிகிறது.

சரத்குமாரின் தொழில் சாம்ராஜ்யத்தை தரை மட்டமாக்க சரத்தின் மகன்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஷாமை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார் பிரகாஷ்ராஜ். தற்போது எஞ்சியிருக்கும் தனது வாரிசான விஜய்யை தனக்குப் பதிலாக சேர்மன் பொறுப்புக்குக் கொண்டு வருகிறார் சரத்குமார்.
இப்போது பிரகாஷ்ராஜை எதிர்த்து நேரடியாக மோத வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்படுகிறது. அதே நேரம் எதிரியின் பக்கம் நின்றிருக்கும் தனது அண்ணன்களை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம்.. குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் என்று அனைத்து வேலைகளும் விஜய்யின் தலை மீதே விழுக.. இதையெல்லாம் அவர் எப்படி செய்து முடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.படம் முழுவதிலும் விஜய். அவரது ரசிகர்களுக்கு அவர் என்னவெல்லாம் செய்தால் பிடிக்குமோ.. எப்படியிருந்தால் பிடிக்குமோ.. அது போலவே விஜய்யை கடைசிவரையிலும் திரையில் காட்சிபடுத்தி இருக்கிறார்இயக்குநர்.

அம்மாவிடம் பாசம், அப்பாவிடம் கோபமும், தாபமும், அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் பரிவு.. வேலைக்காரனான யோகிபாபுவுடன் கலாய்ப்பு.. காதலியான ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் என்று சகலத்தையும் நூறு சதவிகிதம் முழுமையாகச் செய்திருக்கிறார் நாயகன் விஜய்.

வில்லன் கோஷ்டியுடன் அவர் போடும் மூன்று சளைக்காத சண்டைகளும் அசத்தல். இதேபோல் நடனத்தில் விஜய்க்கு இருக்கும் திறமையும், நளினமும் இந்தப் படத்திலும் அழகாய் பதிவாகியிருக்கிறது.

படத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பாடல் காட்சிகளின் நடனங்களும், இனி வரும் காலங்களில் அனைத்து மேடைகளிலும் பின்பற்றப்படும். ஆடப்படும். உலகளாவிய அளவில் நிச்சயமாகப் பேசப்படும். அதிலும் ‘ரஞ்சிதமே’ பாடலின் நடனம் கொள்ளை அழகு.

தன்னுடைய உடல் மொழியாலேயே பல காட்சிகளில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார் விஜய். அதேபோல் யோகிபாபுவுடன் அவர் பேசும் காட்சிகளில் சிரிப்பலை எழும்புகிறது. ஷாமுக்கு குடும்பம் பற்றிய புரிதலை எடுத்துச் சொல்லியும், மனைவி, மகளின் அருமை பற்றி ஸ்ரீகாந்துக்கு எடுத்துச் சொல்வதிலும், சரத்துக்கே கடைசியாக அட்வைஸ் செய்து மகன்களுக்கும் ஒரு விருப்பம் இருக்கும் என்பதை உணர்த்துவதிலும் விஜய்யின் கதாப்பாத்திரம் சிறப்பாகவே நடித்துள்ளது.நாயகி ராஷ்மிகா 10 காட்சிகளில் மட்டுமே வந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் நடனத்தில் அசத்தியிருக்கிறார். நடிப்பென்று பெரிதாக இல்லை.நடிப்பில் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார்கள் பிரகாஷ்ராஜூம், சரத்குமாரும்.
சரத்குமார் முற்பாதியில் கம்பீரமான தொழிலதிபராக வலம் வருபவர்.. ஒரு சிறு தோல்வியைக்கூட தாங்கிக் கொள்ள முடியாதவராக இருப்பவர் தனக்கு நாள் குறித்தாகிவிட்டது என்பதை உணர்ந்தவுடன் தளர்ந்துபோய் தான் செய்த கெட்டவைகளை மட்டும் நினைத்துப் பார்த்து மகனிடம் உருகுவதிலும் சிறப்பு
வேறொரு பெண்ணுக்காக மனைவி, மகளை பிரிந்துபோய் பின்பு உண்மை உணர்ந்து திருந்தி, திரும்பி வரும் ஸ்ரீகாந்த் அத்தருணத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் கடைசிவரையிலும் முரண்பட்ட அண்ணனாகவே வந்திருக்கும் ஷாமும் பொருத்தமான தேர்வுதான்.

வழமையான அம்மாவாக ஜெயசுதா மெதுவாக வசனங்களை பேசி குடும்பத் தலைவியாகவே மாறியிருக்கிறார். கணவரின் கள்ளத் தொடர்பு தெரிந்து பொரிந்து தள்ளும் சங்கீதா, வீட்டு வேலைக்காரனாக இருந்து கொண்டே வீட்டில் இருப்பவர்களை நக்கல் செய்து கொல்லும் யோகிபாபு என்று பலரும் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். தொழில் நுட்பத்தில் மாஸ் ஹீரோவுக்கான படம் என்பதை காட்சிக்குக் காட்சி ஞாபகப்படுத்தியிருக்கிறார்கள். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளிலும், சுரங்கக் காட்சிகளிலும் வித்தை காட்டியிருக்கிறது.
நடன இயக்குநர் ஜானியின் அழகான ஸ்டெப்ஸ்களை கொண்ட நடனங்கள் அனைத்தும் பேசப்படக் கூடியவை. தமனின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களில் ‘ரஞ்சிதமே’ பாடல் மனதைக் கொள்ளை கொண்டது. மற்றவை நடனத்திற்காகப் பேசப்படவுள்ளன. பின்னணி இசையை விஜய்யே ஒரு காட்சியில் போடச் சொல்வதுபோல அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அது விஜய்யின் கதாநாயக பிம்பத்தை கூட்டியிருக்கிறது எனலாம்.
இது போன்ற பல படங்கள் இதற்கு முன்பாக வந்திருக்கின்றன. தெலுங்கில் நிறையவே உள்ளன. அவற்றில் இருந்து ஒவ்வொரு கதாப்பாத்திரமாகப் பிரித்தெடுத்து இந்தக் கதையைக் கோர்த்திருக்கிறார் இயக்குநர்.
7 வருடங்களாகியும் விஜய் வீட்டுக்கே வராமல் இருக்கிறார் என்பதும், இவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பம் என்றாலும், இதில் பிடிப்பில்லாமல் விஜய் இருக்கிறார் என்பதும் நம்ப முடியாததாக இருக்கிறது.முதல் பாதியில் படம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர். படம் மொத்தமாய் அடுத்தடுத்த காட்சிகளை நாமே சொல்லிவிடும் அளவுக்கு இருப்பதுதான் மிகப் பெரிய குறை..!விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்துக் கொண்டு அவர்களது ரசிகர்களுக்குப் பிடித்தாற்போன்றுதான் படத்தைத் தர முடியும் என்பதால் இந்தப் படத்தை வேறொன்றும் சொல்ல முடியாது.

விஜய் ரசிகர்களுக்கான படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *