• Thu. May 2nd, 2024

“இசை வெளியீட்டு விழாகூட நடத்தக் கூடாதா..?” – இயக்குநர் பேரரசு கேள்வி

Byதன பாலன்

Jan 12, 2023

ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் ‘பருந்துப் பார்வை’ இதழ் ஆசிரியரும் நடிகருமான சி.எம்.துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக், காயத்ரி நடிப்பில் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விழித்தெழு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 10.01.2023 மாலை சென்னையில் உள்ளபிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர்கள்(கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் சங்கம், தொழிலதிபர் தாம் கண்ணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் சி.எம்.துரைஆனந்த் பேசும்போது,

“சென்ற ஆண்டு இதே இடத்தில் ஒரு திரைப்பட விழாவில் நான் கலந்து கொண்டபோது நானும் திரையுலகில் நுழைந்து ஓராண்டுக்குள் ஒரு விழாவில் கலந்து கொள்வேன் என்று கூறினேன். அதேபோலவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன்.
நான் பல்லாண்டுகளாகத் திரையுலகத் தொடர்பில் இருக்கிறேன். பலர் கதை சொல்வார்கள். ஆனால் எடுப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை வராது. ஆனால் இந்த இயக்குநர் தமிழ்ச்செல்வன் சொன்ன மாதிரியே படத்தை எடுத்துள்ளார்.இயக்குநர் கதையை என்னிடம் சொன்னபோது, “ஆறு மாதத்தில் எடுத்து முடிக்க முடியுமா?” என்று கேட்டேன். “முடியும்…” என்றார். அதன்படியே ஆறே மாதத்தில் நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம். வரும் பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

கதையின் நாயகன் அசோக் பேசும்போது,
இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இதைச் சரியானபடி அழுத்தமாகச் சொன்னால் படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை வைத்தேன். இப்போதுதான் காட்சிகளைப் பார்க்கிறேன். நன்றாக எடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் அப்பகுதி மக்களிடம் சம்பாதித்துள்ள அன்பையும், நற்பெயரையும் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அது எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் வராது.
ஒரு பேனாவுக்குள்ள சக்தி, எந்த தோட்டாவுக்கும் இல்லை.. கத்தியிலும் இல்லை. அதை இந்தப் படம் பிரதிபலிக்கிறது…” என்றார்.

படத்தின் நாயகி காயத்ரி பேசும்போது,

“இயக்குநர் தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் முன்பு ஒரு படத்தில் நடித்து இருந்தேன். நீண்ட நாள் கழித்து என்னை நினைவு வைத்திருந்து படத்தில் நடிக்க அழைத்தார்.நான் இதில் போலீஸ் ஆக நடித்துள்ளேன். நான் வாய்ப்பு தேடி பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் போலீஸ்காரர் பாத்திரம் என்றால் இவ்வளவு குள்ளமான இவரால் போலீசாக நடிக்க முடியாது என்று அவநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் போலீசாக நடித்துள்ளது பெருமைக்குரியது.என்னுடைய நண்பர்களிடம் நான் இதைச் சொன்னபோது அவர்கள் யாருமே இதை நம்பவில்லை. அதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. படப்பிடிப்பு இடத்தில் அனைவரும் பரபரப்பாக இருந்து கொண்டிருக்கும்போது எந்தவித பதற்றமுமில்லாமல் பொறுமையாக இருப்பார் இயக்குநர். அவரது பொறுமை எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் என்றார்

படத்தின் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் பேசும்போது,

“படக் குழுவினர் நாங்கள் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். நேரம், காலம் பார்க்காமல், இரவு, பகல் பார்க்காமல் அனைவரும் பணியாற்றி ஒத்துழைத்துக் கொடுத்தார்கள். அதற்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மொபைல் என்ற விஷயத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தாலும் இணையதள மோசடிகள் போன்ற கெட்ட விஷயங்களும் நிறைய இருக்கின்றன. அது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது..” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“நான் நிறைய சின்ன பட விழாக்களில் கலந்து கொள்வேன். நான் இந்தப் படத்திற்கு வந்தது சின்ன படம் என்பதால் மட்டுமல்ல. இந்தப் படத்தை எடுத்தவர்கள் சிவகங்கை மண் என்பதால்தான். அது எனது மண் என்பதால்தான் வந்தேன்.சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்புமிக்கது. வீர மண், பாச மண், ஆன்மீக மண். இப்படி எத்தனையோ சிறப்புகள் கொண்டது. சிவகங்கை சீமையிலிருந்து பிறந்து இந்தக் கலை உலகிற்கு எத்தனையோ பேர் வந்து இருக்கிறார்கள். பெரிய பட்டியலே இருக்கிறது.
ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள், கவியரசு கண்ணதாசன் அவர்கள், ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்களுக்கு ஏராளமான படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன், இயக்குநர்கள் ராஜசேகர், மகேந்திரன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், கஞ்சா கருப்பு வரை பலர் உண்டு. கம்பர் வாழ்ந்து மறைந்த ஊர் சிவகங்கைச் சீமை நாட்டரசன் கோட்டை. அங்கே கம்பனுக்கு சமாதி உள்ளது. உங்கள் பேரரசுகூட சிவகங்கை சீமைதான். இப்படி எத்தனையோ பேர் வந்திருக்கிறோம். செந்தமிழன் சீமான் பிறந்த ஊர் சிவகங்கை சீமைதானே.
வரலாற்றை எடுத்துக் கொண்டால் வீரம் நிறைந்த பாண்டியர்கள் பிறந்ததும் இந்த சீமைதான். எங்கள் ஊரிலிருந்து படம் எடுக்க வந்த இவரைப் பற்றி நான் விடிய விடிய பேசுவேன்.
இங்கே கதாநாயகியாக நடித்த காயத்ரி பேசியபோது அபிநயம் பிடித்துப் பேசியது போல் இருந்தது. அப்போது எனக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ‘ஜில் ஜில்’ ரமாமணியாக வந்த மனோரமா நினைவுக்கு வந்தார்.

பெரிய படங்களால் சின்ன படங்கள் இன்று பாதிக்கப்படுகின்றன. பெரிய படங்கள் படம் வெளியாகும்போது சின்ன படங்கள் வெளியிட முடியாது. சரி. உங்கள் பெரிய படங்கள் வெளியாகும்போது இசை வெளியீட்டு விழாகூட நடக்க கூடாதா..? இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

“இன்று செல்போன் பிரச்சினையைவிட சாராயக் கடை பிரச்சினைதான் பெரிதாக உள்ளது. தெருவுக்கு தெரு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று விவசாயத்தை மறந்து விட்டோம். ஜல்லிக்கட்டுக்குப் போராடியது போல் விவசாயத்திற்காக நாம் போராட வேண்டும்.தமிழ் மண் வீரம் செறிந்த மண். எவனையும் எதிர்த்த அடிக்கக் கூடிய தைரியம் உள்ளவர்கள் தமிழர்கள். இந்தப் பட விழாவிற்கு வந்துள்ள இவர்களைப் பார்த்தால் குடும்ப விழாபோல் உணர்கிறேன்…” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *