ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மனிதனை மனிதன் கை ரிக்சா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றை தலைவிதித்தவர் சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்கள். அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர் அவர்கள்.
இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதைக் காண்பது அரிது. ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே அடித்து கழிவிரக்கத்தை தேடுகிறார். தெருக்களில் சாட்டையால் அடித்து பிச்சை கேட்பவர்களை விட அண்ணாமலையின் செயல்பாடு அநாகரீகமானது.
இப்படி செய்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அல்லது கவன ஈர்ப்புக்காக செய்பவர்களாக இருக்க வேண்டும். இதில் பாஜகவும், அண்ணாமலையும் என்ன ரகம் என்பதை மக்களே புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.