• Fri. Jun 9th, 2023

“காதலர் தின ஸ்பெஷல்” பாரீஸ் ‘லவ் லாக்’ பாலம்

பாரீஸில், சீன் ஆற்றங்கரைகளை இணைக்கும் பாலம் ஒன்று, காதல் மனங்களை இணைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
காதல்.. இரு மனங்களை இணைக்கும் இரும்பு பாலம். அதனால்தானோ என்னவோ, பாரீஸில் இருக்கும் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் எனப்படும் லவ் லாக் பாலம் முழுக்க பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த லவ் லாக் பாலத்துக்கு வரும் காதலர்கள், ஒரு பாரம்பரிய சடங்கை தவறாமல் செய்கிறார்கள்.

லட்சக்கணக்கான சாவிகளை தன்னுள் வாங்கிக் கொண்டு எந்த விதமான அலட்டலும் இல்லாமல் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் சீன் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள லவ் லாக் பாலம், பாரீஸின் சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது. காதலுக்கு கண் இல்லை என்பது போல், இந்தப் பாலத்தில் தொங்கும் பூட்டுகளுக்கும் சாவிகள் கிடையாது.
தங்களது காதல் எந்த வகையிலும் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக, காதலர்கள் சேர்ந்து ஒரு பூட்டை, அந்த பாலத்தின் இரும்புக் கம்பிகளில் மாட்டி, பூட்டை பூட்டி அதன் சாவிகளை, சீன் ஆற்றில் வீசிவிடுகிறார்கள்.

இதன் மூலம், தங்களது காதலும், இந்த பூட்டு போல பிரிக்க முடியாததாக, காலத்துக்கும் இருக்கும் என்பது காதலர்களின் ஐதீகம். வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் கூட, இந்த பாரம்பரிய வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். காதலர் தினம் போன்ற நாள்களில் இந்தச் சடங்கை செய்வதற்காகவே, பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமான காதல் ஜோடிகள் பாரிஸுக்கு வருவதும் உண்டாம்.

சிலர் தங்களது பெயர்களை பூட்டுகளில் எழுதிச் செல்கிறார்கள். சிலர் பெயர் பதித்த பூட்டுகளை வாங்கி வருகிறார்கள். ஆனால், எப்படியும் ஒரு காதல் கைகூடியதும், இங்கே வந்து பூட்டுப் போடும் சடங்கை மட்டும் யாரும் மறப்பதேயில்லை.

மிகவும் ஆச்சரியப்படும்வகையில், இதன் பின்னணி அமைந்துள்ளது. என்னவென்றால், அன்புக்குரியவரின் பிரிவை உணர்த்தும் வகையில், ஹங்கேரியில் நடந்த ஒரு காதல் கதைதான் இந்த லவ் லாக் பாலத்துக்கு அடித்தளம். இரண்டாம் உலகப் போரின்போது தனது அன்புக்குரிய காதலனைப் பார்க்க முடியாத காதலி, வழக்கமாக தாங்கள் எப்போதும் சந்திக்கும் ஓரிடத்தில் வந்து பூட்டுகளைப் பூட்டி, தங்களது காதலும் இதுபோல நிலைக்க வேண்டும் என்று வேண்டிச் செல்வாராம். அவர் தனது காதலை வெளிப்படுத்த இப்படி ஒரு முறையை கடைப்பிடித்துள்ளார். இதையே, அப்பகுதியில், பலரும் பின்பற்ற, அந்தப் பழக்கம், ஹங்கேரியுடன் நின்றுவிடாமல், காதலுக்குப் பெயர்போன பாரீஸுக்கு பறந்து வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்கிறார்கள்.

இந்தப் பழக்கம், இளம் இத்தாலிய தம்பதிகளிடமிருந்து பாரிஸுக்கு பரவியதாகவும் ஒரு கூற்று உண்டு. அதாவது, 2006ஆம் ஆண்டு இத்தாலி திரையரங்குகளில் திரையிடப்பட்ட ‘எனக்கு நீ வேண்டும்’ என்ற காதல் திரைப்படத்தில், ரோமில் உள்ள போண்டே மில்வோ பாலத்தில் சந்திக்கும் ஒரு காதல் ஜோடி, தங்களது பெயர்களை ஒரு பூட்டில் எழுதி, அதை அந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் பூட்டி, அதன் சாவிகளை ஆற்றில் வீசும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை அப்போது பல இத்தாலி காதல் ஜோடிகள் பின்பற்ற, மெல்ல இந்த சடங்கு, பான்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆனால், இந்த லவ் லாக் சடங்கு, கரோனா தொற்றைப்போல தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிவிட்டது. பல்வேறு நாடுகளிலும், இதுபோன்று பூட்டுகளைத் தொங்க விட சிறப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டும், பாலங்கள் காதல் பூட்டுகளுக்கு அடிமையாகிவிருப்பதையும் காண முடிகிறது.

தங்கள் காதலைப் பிரிக்க முடியாது என்று சொல்லவும், மிகவும் வித்தியாசமான முறையாகவும், அதுவும் நமக்கு முன்பு லட்சக்கணக்கான காதலர்கள் பின்பற்றிய சடங்கு என்பதால், நவீன காதலர்களுக்கும் அதிகம் பிடித்துவிட்டது போலும். உலகம் முழுக்க இந்த சம்பிரதாயம் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், இந்த சம்பிரதாயம் என்னவோ, அண்மையில்தான் தோன்றியிருக்கிறது. அதாவது, 2008ஆம் ஆண்டிலிருந்துதான், இந்த சீன் ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலம், லவ் லாக் பாலமாக மாறத் தொடங்கியது. எப்போதும் மக்கள் கூட்டமாக அல்லது பூட்டுகள் நிறைந்த பாலமாக இது தென்படும். இதனால், இது ஒரு காதல் சின்னமாகவும் மாறியது.
சீன் ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்ட, இந்த லவ் லாக் பாலம் ரம்மியம் கொஞ்சும் இடம்தான்.

உண்மையில் காதலிக்காதவர்களும், காதலிக்கப்படாதவர்களும், இங்கு தொங்கும் பூட்டுகளைப் பார்த்தால் ஒரு நிமிடம், உலகில் தனித்துவிடப்பட்ட மனிதன் தான்மட்டும்தானோ என்று வியக்கும் நிலை கூட ஏற்படலாம்.

பாலத்தின் பக்கவாட்டு இரும்புத் தடுப்பு முழுக்க முழுக்க விதவிதமான பல வண்ணங்களில் பூட்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. காதலர்கள் ஒன்றாக இங்கு வந்து, இருவரும் சேர்ந்து இரும்புத் தடுப்பில், பூட்டைப் போட்டு, அதன் சாவியை ஆற்றில் வீசும் காட்சியைப் பார்க்க காதல் ரசம் சொட்டும்.

பாரிஸ் வர நினைக்கும் பலரும், இந்த லவ் லாக் பாலம் பற்றி தெரிந்து கொண்டால், நிச்சயம், இங்கு வரத் துடிப்பது என்னவோ உண்மைதான். பாலத்தில் தொங்கும் பூட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காதல் கதைகளைப் பேசுகின்றன. இந்த காதல் பூட்டுகளைப் பார்க்கும் எவரொருவருக்கும் நிச்சயம் ஒரு ரொமாண்டிக் உணர்வு மேலோங்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பாரிஸீல் எத்தனையோ பாலங்கள் இருக்க.. குறிப்பாக இந்த சின் ஆற்றின் மீதே பாரீஸ் எல்லைக்குள் மட்டும் 37 பாலங்கள் இருக்கின்றன. அதில் 5 பாலங்கள் மட்டுமே நடப்பவர்களுக்கானது. இதில், இந்த லவ் லாக் பாலம் மட்டும் காதல் பூட்டுகளுக்குரியதாக மாறியது எப்படி என்று கேட்டால், உலகப் புகழ்பெற்ற மோனா லிஸாவின் ஓவியம் இடம்பெற்றிருக்கும் லவ்ரே அருங்காட்சியகத்துக்கு மிக அருகே இந்தப் பாலம் அமைந்திருப்பதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

நெப்போலியன் ஆட்சிக் காலத்தில், அதாவது 1804ஆம் ஆண்டில் இந்த பான்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலமும், காதலைப் போலவே எண்ணற்ற தாக்குதல்களை சந்தித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது குண்டுகள் விழுந்து சேதமடைந்து, அவ்வப்போது சிறிய படகுகள் மோதி சேதமடைந்து, பிறகு 1979ஆம் ஆண்டு ஒரு பெரிய கப்பல் இந்தப் பாலத்தின் மீது மோதி பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, இந்த பாலம் 1984ஆம் ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டு, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு காதலர்கள் தான் வருவார்கள் என்றில்லை, சீன் ஆற்றின் அழகிய காட்சிகளை படமெடுக்க ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் இங்கு வந்து வண்ணம் இருக்கிறார்கள். ஆனால், என்ன, இந்த காதலர்களின் காதல் பூட்டுகளால், பாவம் பாலத்துக்குத்தான் பாதிப்பு. இதுபோன்ற எண்ணற்ற பூட்டுகளால், அதன் எடை கூடி, 2014ஆம் ஆண்டு பாலத்தின் தடுப்புச் சுவர் ஒரு பகுதியாக இடிந்து விழுந்து சேதமடைந்துவிட்டது. அப்போதுதான் காதலின் பலம் என்னவென்று.. மன்னிக்கவும் பூட்டுகளின் எடை என்னவென்று தெரிந்து, அவற்றை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கு பூட்டப்படும் பூட்டுகளின் எடை எவ்வளவு தெரியுமா? 7,500 கிலோ என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், பாலத்தின் பாதுகாப்பைப் பற்றியெல்லாம் எந்தக் காதலர்களும் கவலைப்படுவதில்லை. இங்கு வரும் காதலர்கள் கையில் மறக்காமல் ஒரு பூட்டை எடுத்துவருவதை தடுக்க முடியவில்லை. சரி இந்த பூட்டால் வெறும் பாலத்துக்கு மட்டும்தான் பாதிப்பா என்றால், இல்லை.. ஆறும்தான் கெடுகிறது. காதலர்கள் வீசும் சாவிகள் மக்கி, ஆற்றுநீர் கெடுவதும், வடிகால்களை சாவிகள் அடைத்துக்கொண்டு, அவ்வப்போது வெள்ள பாதிப்பு ஏற்படுவதும் உண்டு.

இப்படிப் பூட்டு போட்டால் காதல் உறுதியாகும் என்பதில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கையே இல்லை. இந்த பூட்டுகளால், பாலத்தின் மீதிருந்து சீன் ஆற்றின் அழகைக் கண்டு ரசிக்க முடியாமல் போகிறது. பாரிஸ் நகரின் அழகிய தோற்றமே இந்த பூட்டுகளால் மங்கிவிட்டது. அவ்வளவு ஏன், பாலத்தின் மீதிருந்து, ஆற்றை புகைப்படம் கூட எடுக்க முடியாமல் போய்விட்டது என்று புலம்பித் தள்ளுகிறார்கள் உள்ளூர் பாரீஸ் வாழ் தன்னார்வலர்கள். பாரீஸ் நகருக்கு வந்தோமா.. சுற்றிப் பார்த்தோமா என்று போகாமல், இப்படி ஒரு ஆற்றையும், ஆற்றுப் பாலத்தையும் சேதப்படுத்துகிறார்களே என்று குமுறும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

2010ஆம் ஆண்டிலேயே இந்த லவ் லாக் பாரம்பரியத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அப்போது இதன் பாதிப்பு என்னவென்பது யாருக்கும் புரியவில்லை. பிறகு காதல் பூட்டுகளின் எடையால், பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தபோதுதான், அதன் அபாயம் புரிய வந்தது. லவ் லாக் சங்குக்குக்கு தடை விதிக்கவும் கூட முடிவு செய்யப்பட்டது.
தற்போது பாலத்தின் பாதுகாப்புக் கருதி, இவ்வாறு பூட்டுகளைப் போடாத வகையில், தடுப்புச் சுவர்களுக்கு கூடுதலாக ஒரு கண்ணாடிச் சுவரும் போடப்பட்டுள்ளது. இது காதலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *