கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஆட்டோக்கள் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள தடுப்பூசி விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட வில்லை என குற்றம் சாட்டி ஆட்டோக்களை வழி மறித்த பா.ஜ.க.வினரால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் 555 முகாம்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் 105 தடுப்பூசி முகாம்களும், வீடுகளுக்கு சென்று நேரடியாக 52 வார்டுகளிலும் 52 ஆட்டோக்கள் மூலம் சிறப்பு நடமாடும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டு வருகிறது. இதில் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ள பேனர்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் சென்ற ஆட்டோவை வழிமறித்த பாரதீய ஜனதா கட்சியினர் ஆட்டோவை வழிமறத்து அதில் ஒட்டப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர். மேலும் பிரதமர் புகைப்படம் வைக்கவில்லை என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து அப்பகுதியில் திமுகவினரும் கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடம் வந்த கோட்டார் போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அப்பகுதியில் இருந்து சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில் மோடி புகைப்படம் இல்லாததை கண்டித்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று நடமாடும் தடுப்பூசி முகாமிற்கு அமைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.