

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களிலுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால், அதைக் கூடுதல் கவனத்துடன் கையாள்கிறது பாஜக தலைமை. இந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளாகக் அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்த விஜய் ரூபானி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பூபேந்திரபாய் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2017இல் நடந்த தேர்தலிலேயே பாஜக நூலிழையிலேயே பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டது. எனவே, அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் சத்தமில்லாமல் குஜராத் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது. கன்னையா குமார் சமீபத்தில் தான் காங்கிரஸில் இணைந்தார். அதேபோல ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் இணையவுள்ளார்.
இச்சூழலில் குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார். குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அமித் சவ்தா, சக்திசிங் கோஹில், பரேஷ் தனனி, அர்ஜுன் மோத்வாடியா மற்றும் அமீ யாஜ்னிக் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராகுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
