பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் V.வெங்கடேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பல்லாவரம் மற்றும் குன்னம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, பல்லாவரத்தில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசன் தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, பல்லாவரம் பகுதியில் உள்ள கணபதி ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேலதாளங்கள் முழங்க, சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக ஆதரவாளர்களுடன் சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், பல்லாவரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங், ஐஜேகே துணைப் பொதுச் செயலாளர் ஆனந்த முருகன், பாஜக நிர்வாகி ரகுராமன், பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பெருமளவிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
மேலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் நேரில் கலந்து கொண்டு, வேட்பாளர் வெங்கடேசனை வாழ்த்தி ஆசி வழங்கினார். கட்சித் தலைவர் நேரில் வருகை தந்தது, அக்கட்சியினரிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் வெங்கடேசன், “எனது மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த எனது தெய்வம் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆசியுடனும், எடப்பாடியார் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் ஆதரவுடனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்” என தெரிவித்தார்.
மேலும், பல்லாவரம் தொகுதியை முன்மாதிரித் தொகுதியாக மாற்றுவதே தனது இலக்கு என்றும், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதுடன், பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பெண்களுக்கான ஸ்கூட்டர் மானியம், இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டாக்டர் பாரிவேந்தர் வழிகாட்டுதலின் கீழ், பல்லாவரம் மக்கள் தன்னை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இதன் மூலம் பல்லாவரம் தொகுதியில் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.



