• Tue. Apr 30th, 2024

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு

Byவிஷா

Apr 17, 2024

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தங்கம், கச்சா எண்ணெய், பெட்ரோல் விலையில் மாற்றம் நிகழலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த இஸ்ரேல் படையின் காசாவுக்கு எதிரான தாக்குதலில் ஹமாசுக்கு ஈரான் ஆதரவளித்து வந்தது. இந்நிலையில் சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரானியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி ஈரான் படைத்தளபதிகளை கொலை செய்ததற்கு பதிலடியாக, கடந்த 13ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்கிய நிலையில், அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதிப்புகளை தகர்த்தது. தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது..
பொதுவாக ஒரு நாடு சர்வதேச அளவிலான சட்டத்தை மீறும் போதோ பயங்கரவாத செயலில் ஈடுபடும்போதோ அந்நாட்டுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த தடைகள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட தனிமனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். இதில் பயணத்தடை, அந்நாட்டுக்கு ஆயுதம் விற்பதற்கான தடை உள்ளிட்டவையும் அடக்கம்…
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் வெளியிட்ட அறிக்கையில், ஈரானுக்கு எதிரான புதிய தடைகள் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், ஈரானின் ராக்கெட், ஏவுகணை, இஸ்லாமிய புரட்சி காவல்படை, ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக தங்களின் நட்பு நாடுகளும் இனிவரும் நாட்களில் தடைவிதிக்கக் கூடும் எனவும் ஜேக் சுல்லிவன் கூறினார். இதற்கு முதற்படியாக எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதில் முதற்கட்ட தடையை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஈரான் போரை அறிவித்த நாளில் இருந்தே தங்க விலை தொடர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதன் எதிரொலியாக ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 440 ரூபாய் என, கடந்த 14ம் தேதி தங்கவிலை புதிய உச்சத்தை எட்டியது. இதனையும் விட விலை உயர்ந்து இன்றைய நாள், கிராம் தங்கம் 6 ஆயிரத்து 870 ரூபாய், ஒரு சவரன் 54 ஆயிரத்து 960 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பட்சத்தில், தங்கம் சவரன் 60 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு ஈரான் அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்கனவே ஜனவரியில் 75 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை 90 டாலராக அதிகரித்த நிலையில், பொருளாதாரத் தடையால் எண்ணெய் இறக்குமதி – ஏற்றுமதியில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் தங்கம், கச்சா எண்ணெய், பெட்ரோல் விலையில் அதிக மாற்றம் நிகழ்வதோடு விலை உயர்வுக்கு வழிவகுப்பதற்கான வாய்ப்பும் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பங்குச்சந்தையிலும் வரலாற்று மாற்றத்தைக் காண முடியும் எனவும் கணிக்கப்படுகிறது. தொடர்ந்து பணவீக்க விகிதம் அதிகரித்து, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு இல்லாமல் போகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *