• Mon. Jan 20th, 2025

குளிர்கால ஒலிம்பிக் தொடரை புறக்கணிக்க முடிவு செய்த அமெரிக்கா..!

இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜென் சகி கூறியதாவது:
ஷின்ஜியாங்கில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் 2022ம் ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் கூட்டத்தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் மூலம், ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால், ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில், எந்த அதிகாரியையும் அமெரிக்கா அனுப்பி வைக்காது.


இதே கொள்கை, பீஜிங்கில் நடக்க உள்ள, குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பொருந்தும். இந்த முடிவை எங்களது நட்பு நாடுகளிடமும் தெரிவித்து விட்டோம். புறக்கணிப்பது என்பது, மனித உரிமை மீறலுக்கு எதிராக அமெரிக்கா குரல் எழுப்புவதற்கு கடைசி கட்ட நடவடிக்கையாக இருக்காது. அது தொடரும். ஒலிம்பிக் போட்டிக்காக ஆண்டுக்கணக்கில் அமெரிக்க வீரர்கள் பயிற்சி எடுத்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை மொத்தமாக புறக்கணிப்பது என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கு முன்னர், கடந்த 1980ம் ஆண்டு ஜிம்மி கார்டர் அதிபராக இருந்த போது, நடந்த ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்தது. கடந்த ஆண்டு 2020ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, அமெரிக்க பிரதிநிதிகள், அதிபரின் மனைவி ஜில் பைடன் தலைமையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக உய்கூர் இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக சீனா மீது அமெரிக்கா கொடுக்கும் மிகப்பெரிய நெருக்கடியாக, குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிப்பு நடவடிக்கை இருக்கும் என கருதப்படுகிறது. சீனாவின் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தூதரக ரீதியில் புறக்கணிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் பைடன் கூறியிருந்தார்.