• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை ஐஐடி உடன் மத்திய வேளாண் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Byவிஷா

Jan 3, 2025

தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாக விவசாயத்தின் உற்பத்தியை மேம்படுத்தும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிபபில் தெரிவித்திருப்பதாவது..,
தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘விஸ்டார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் சமீபத்தில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய வேளாண் அமைச்சக இணை செயலர் சாமுவேல் பிரவீன் குமார், சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஏ.தில்லைராஜன் கையெழுத்திட்டனர்.
தில்லைராஜன் கூறும்போது, “இந்திய சமூக, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம். அந்த வகையில் வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் வேளாண் தொடர்பான தகவல்கள் விவசாயிகளை எளிதாகவும், விரைவாகவும் சென்றடையும்” என்றார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வேளாண் சந்தையில் புதிய பொருட்கள், புதிய சேவைகளைக் கொண்டுவரும். வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு தகவல் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் பல்வேறு வழிகளில் பயன் தரும்.

வேளாண் துறையில் ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகும். தகவல் தொழில்நுட்ப வசதிகள் விவசாயிகளை எளிதில் சென்றடையும். விவசாயிகள் மற்றும் அதுசார்ந்த துறைகளில் உள்ளவர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் திறன்கள், சலுகைகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.