உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜரான அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து லக்கிம்பூர் காவல் நிலையம் சென்ற ஆசிஷ் மிஸ்ராவிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
அவரிடமிருந்து செல்போன்களை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தன்று அந்த பகுதியில் தான் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை ஆசிஷ் மிஸ்ரா அளித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விசாரணைக்குப் பிறகு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யக் கோரி, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்து நடத்திய போராட்டத்தை விலக்கிக் கொண்டார். உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை கைது செய்ய வேண்டும் என சன்யுக்த் கிசான் மோர்சா தலைவர் யோகேந்திர யாதவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டமும் நடைபெற்றது.