• Sat. Apr 20th, 2024

மூன்று கொலை முயற்சிகளிலிருந்து தப்பிய உக்ரைன் அதிபர்

ரஷ்யப் படையினரால் மூன்று முறை அரங்கேற்றப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி லாவகமாக தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச இதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 9-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரங்கள் உருக்குலைந்து போயுள்ளன.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியை உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக, தலைநகருக்குள் ரஷ்ய படையினரால் நுழைய முடியவில்லை. ராணுவத்தினருடன் பொதுமக்களும் சேர்ந்து ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை கொலை செய்ய மூன்று முறை ரஷ்ய சிறப்புப் படைப்பிரிவினர் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:

ரஷ்யாவின் துணை ராணுவ அமைப்பான ‘வேக்னர்’ படைப்பிரிவில் உள்ள சில வீரர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்து, உக்ரைன் அதிபரை கொலை செய்ய ரஷ்ய உளவுத்துறை அனுப்பி வைத்தது. இந்த தகவலை ரஷ்ய ராணுவத்தில் உள்ள சில அதிகாரிகளே, உக்ரைன் அரசுக்கு தெரிவித்து விட்டனர். இதனால் உக்ரைன் அதிபருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, அவர் தங்கும் இடங்களும் உடனடியாக மாற்றப்பட்டு விட்டன. இது தெரியாமல், வேக்னர் படையினர் கீவ் நகரில் இருந்த உக்ரைன் அதிபரின் ரகசிய கட்டடத்துக்கு கடந்த சனிக்கிழமை நுழைந்துள்ளனர். இதனை எதிர்பார்த்து காத்திருந்த உக்ரைன் ராணுவத்தினர், அவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்திவிட்டனர்.

அதேபோல, ரஷ்யாவில் உள்ள கிளர்ச்சி அமைப்பான ‘சேச்சான்’ படையில் உள்ள சிலரும், உக்ரைன் அதிபரை கொலை செய்ய தலைநகர் கீவ்வுக்கு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள், உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக ரகசிய பாதை வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களின் வருகை குறித்தும் உக்ரைன் ராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதால், அவர்களையும் எளிதில் அடையாளம் கண்டு உக்ரைன் சிறப்புப் படையினர் கொன்றுவிட்டனர். இவ்வாறு மூன்று முறை நடைபெற்ற கொலை முயற்சிகளில் இருந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தப்பித்துள்ளார் என அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக தானும், தனது குடும்பத்தினரும் தான் இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரை மீட்க அமெரிக்கா முன்வந்த போதிலும், அதனை ஏற்க மறுத்த செலன்ஸ்கி, கடைசி மூச்சு உள்ள வரை ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக போராடவுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *