உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது.., “கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நன்றி. வருண பகவான் மழை பெய்து கொண்டே இருக்கிறார். நானும் நனைகிறேன். நான் ஒரு விவசாயி. இந்த ஆட்சியை கண்டோ, மழையை கண்டோ அஞ்சமாட்டோம்” என பேசினார்.தொடர்ந்து பேசிய அவர், “ உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா? நடைபெற்று வரும் ஊழலுக்கு அவர் தலைமை ஏற்பார். குடும்ப ஆட்சிக்கு , வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா?” என விமர்சித்தார்.