புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளத்தூர் அருகே இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு கார்களுக்கும் இடையில் சிக்கிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று பகலில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு கார் மீது புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள அம்மா சத்திரம் என்ற கிராமத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த இன்னொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் அவ்வழியே வந்த வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அம்மா சத்திரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு தங்களது ஆதார் எண் பதிவு செய்வதற்காக ஸ்கூட்டரில் வந்திருக்கிறார்கள். விபத்துக்குள்ளான அந்த இரண்டு கார்களுக்கும் இடையில் இந்த பெண்கள் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர்.
சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பலியாகி விட்டனர். அந்தப் பெண்கள் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனைவி வீராயி மற்றும் அவரது மருமகள் சாந்தி ஆகியோர் ஆவர். ஸ்கூட்டரில் கவனக் குறைவாக வந்ததால் இரண்டு கார்களுக்கு இடையில் சிக்கி இறந்துவிட்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த விபத்து நடந்த இடத்தில் தான் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் பழுதாகி சாலையில் ஓடி நிறுத்தப்பட்ட சம்பவமும் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சாலையில் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் அம்மா சத்திரம் கிராம மக்கள் ஒவ்வொரு நிமிடமும் பதபதைப்போடு இருப்பதாகவும் சாலையை கடப்பதற்கு அச்சமாக இருப்பதாகவும் விபத்துகளை குறைக்கும் வண்ணம் அன்னச்சத்திரம் சாலை அருகே பேரிக்கார்டுகள் என்று சொல்லப்படும் இரும்புத் தடுப்புகளை காவல்துறையும் நெடுஞ்சாலை துறையும் நிறுவ வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கையும் விடுத்திருக்கிறார்கள்.




