தமிழக கேரள எல்லை குமுளியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே பட்டாகத்தி கள் மறைத்து வைத்த சம்பவத்தில் இரண்டு பேர்களை குமுளி போலீசார்கள் கைது செய்தனர். பட்டாக்கத்தி தமிழக அதிகாரிகள் அலுவலகம் அருகே மறைத்து வைத்தது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக கேரள எல்லை குமுளியில் பெரியார் புலிகள் காப்பகத்தில் தேக்கடி செல்லும் வழியில் கேரள வனத்துறை சோதனை சாவடி அருகே தமிழக பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு தமிழக அதிகாரிகளின் அலுவலகமும், தங்கும் அறைகளும் உள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகம் அருகே, காட்டில் நேற்று முன்தினம் இரண்டு பட்டா கத்திகள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் குமுளி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்கள் மற்றும் வனத்துறையினர்கள் பட்டாகத்திகளை கைப்பற்றினர். சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், இப்பகுதியில் உள்ளவர்களே இதற்கு பின்னால் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
பின்னர், வெளி ஊர்களிலிருந்து இங்கு வேலைக்கு வந்தவர்களை மையமாக வைத்து நடத்திய விசாரணையில், பட்டாகத்தி மறைத்து வைத்த சம்பவத்தில் பத்தனம்திட்டாவை சேர்ந்த விஜேஷ் விஜயன்(32), கடமநாடு அரவிந்த் ரகு(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தேக்கடியில் வெல்டிங் வேலைக்கு வந்த இருவரும் இங்கு பட்டாகத்திகளை தயாரித்தனர் என்றும், விஜேஷ் இரண்டு பட்டாக்கத்திகளை எடுத்து வரும்போது சோதனைச் சாவடியில் வனத்துறை அதிகாரிகளை கண்டதும் அவை மறைத்து வைத்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியதும் தெரிய வந்தது.
குமுளி எஸ்.ஐ ஜெஃபி ஜார்ஜ் தலைமையிலான குழுவினர் விஜேஷை பத்தனம்திட்டாவிலும், அரவிந்தை குமுளியிலும் கைது செய்தனர். மேலும் இந்த பட்டாகத்திகள் எதற்காக செய்யப்பட்டன, வனவிலங்கு வேட்டைக்கா? இதை ஏன் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடியிருப்பு அருகே ஒளித்து வைத்தார்கள் என போலீசார்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக அதிகாரிகள் பணிபுரியும் இந்த அலுவலகத்தை சுற்றி, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அதை பெரியார் புலிகள் காப்பகத்திற்குள் அனுமதி இல்லாமல் பொருத்தியதாக கேரளா வனத்துறை கூறிய மறுநாளே அந்தக் கண்காணிப்பு கேமரா அடித்து நொறுக்கப்பட்டது. கேமரா நிறுவ வைத்திருந்த போஸ்டும் காணாமல் போனது. இதுகுறித்து தமிழக பொதுப்பணி துறையினர் குமுளியில் கொடுத்த புகார் விசாரணையில் இருக்கும் போது, பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே பட்டாகத்தி மறைத்து வைத்திருந்த சம்பவம் தமிழக அதிகாரிகளிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.