• Wed. Mar 19th, 2025

பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்

ByArul Krishnan

Feb 25, 2025

திட்டக்குடி அருகே அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். ஒருவர் கவலைக்கிடமாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஐவகுடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை ஆக புறப்பட்ட நிலையில் மாலை 4 மணி அளவில் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பாலு மற்றும் காசி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலு பலியானார்.

காசி உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதயாத்திரை சென்றவன் மீது, கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.