கடையம் அருகே தூங்கி கொண்டிருந்த போது மழையால் வீடு இடிந்து தந்தை ,மகள் உயிரிழப்பு, தாய் மருத்துவமனையில் அனுமதி.
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கல்யாணி (60)விவசாயி. இவரது மனைவி வேலம்மாள் (55) மற்றும் இளைய மகள் ரேவதி (26) ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.நேற்று மாலையிலிருந்து இந்தப் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் கல்யாணியின் வீடு இடிந்து விழுந்துள்ளது. வீடு விழுந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தென்காசி மற்றும் ஆலங்குளத்தில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் ஆழ்வார்குறிக்சி போலீசார் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இடிபாட்டில் சிக்கி தூங்கிக் கொண்டிருந்த கல்யாணி மற்றும் மகள் ரேவதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த வேலம்மாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி போலீசார் கல்யாணி, ரேவதி ஆகியோர் உடலை பிரேதப்பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

