உசிலம்பட்டியில் கடைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து புகையிலை விற்பனை செய்து வந்த இருவரை கைது செய்து 6 கிலோ புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்-ன் தனிப்படை போலீசார் உசிலம்பட்டி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது உசிலம்பட்டி மதுரை ரோடு மாருதி நகரைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரது கடை மற்றும் வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரது கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டு இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், இருவரிடமிருந்தும் தலா 3 கிலோ வீதம் 6 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், ஒரு இருசக்கர வாகனம், இரு செல்போன்கள், 4700 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து உசிலம்பட்டி நகர் மற்றும் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உசிலம்பட்டி நகர் மற்றும் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.