ராஜபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி கூலி தொழிலாளியிடம் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த சின்ன ஒப்பனையால் புரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (36) கட்டிடத் தொழிலாளி. இவர் கட்டிட வேலைக்காக திருச்சி செல்வதற்காக ஊரிலிருந்து பஸ்சில் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்தார். இங்கிருந்து திருச்சி பஸ் வர நேரம் உள்ளது என்பதால் சற்று தூரத்தில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்து வரலாம் என்று நடந்து செல்லும்போது, அந்த வழியே பைக்கில் வந்த இருவர், இவர் அருகே பைக்கை நிறுத்தி, மதுக்கடை எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனர். அதற்கு மாரிமுத்து நானும் மது குடிக்கத்தான் செல்கிறேன் என்றதும் சரி வாருங்கள் என்று பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பைக் இருட்டு பகுதிக்கு சென்ற போது, திடீரென பைக்கை நிறுத்தியதோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, பையில் வைத்திருந்த ரூபாய் 750 ரூபாயை பறித்துக்கொண்டு பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி மூலம் ஆய்வு செய்து விசாரணை செய்தபோது, பணம் பறித்து சென்ற நபர்கள் செல்லம் வடக்கு தெருவை சேர்ந்த ஜெகதீஸ்குமார் மகன் ஜெயபிரகாஷ்(20) மற்றும் குமரன் தெரு பகுதியை சேர்ந்த அஜய்(23) ஆகிய இருவர் தான் என்பது தெரிய வந்தது. இதனடிப்படையில் சார்பு ஆய்வாளர் செல்வம் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
