



டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கினார்.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இக்கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் இன்று காலை தொடங்கியுள்ளது. இக்கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் விஜயின் பெற்றோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, உயிரிழந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது.
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றும் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், தொகுதி மறுவரையறையை எதிர்த்தும், இரு மொழி கொள்கையை ஆதரித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவெக கையிலெடுத்துள்ள தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்பது உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

