

தேனி கூடலூர் அருகே தண்ணீர் பாட்டில்கள் கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியார் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. நேற்று காலை 11 மணிக்கு கூடலூருக்கு லாரியில் பண்டல், பண்டலாக தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது.
கம்பம் கூடலூர் இடையே கேப்டன் திடல் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக லாரி டயர் வெடித்தது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
அக்கம் பக்கத்தினர் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் சிதறிக் கிடந்த தண்ணீர் பாட்டில்களையும், லாரியையும் உடனே அப்புறப்படுத்தினர். ரோடு குறுக்கே லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.