• Wed. Apr 24th, 2024

ராசுக் கோனாரின் ஆடும் கர்ணன் வீட்டின் புதையலும்

பேய்கள், அமானுஷ்யங்கள் இல்லாத சமூகப் படைப்புகளில் – அது எழுத்தாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி – அமானுஷ்யத்திற்கு நெருக்கமாக திடீரென ஏதாவது தென்பட்டால் உடல் புல்லரித்துவிடும். பேய்க் கதைகளில் வரும் பீதியைவிட, இந்த எதிர்பாராத தருணங்கள் தரும் அதிர்ச்சி திகைக்கவைக்கும்.


மதுரையைச் சேர்ந்த எஸ். அர்ஷியா சொட்டாங்கல் என்ற நாவலை எழுதியிருக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் கோரிப்பாளையம் பகுதியில் நடக்கிறது கதை. சந்தனத்தேவர் என்பவர் அங்கே வயல்காட்டை வைத்து விவசாயம் செய்துவந்தார். அவருக்கு மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் பூதக்குடிதான் சொந்த ஊர். பூதக்குடியிலிருந்த அங்காளம்மன் கோவிலில் சந்தனத்தேவர் திருடிவிட்டார் என்று சிலர் குற்றம்சாட்டியதால், அங்கேயிருந்து வெளியேறி கோரிப்பாளையத்திற்கு அருகில் நிலம் வாங்கி செட்டிலாகியிருந்தார் சந்தனத் தேவர்.


அந்த நிலத்தில் ஒரு நாள் ராசுக்கோனார் என்பவர் ஆட்டுக்கிடை போட்டிருந்தார். ராசுக் கோனாரிடம் முத்து என்ற கிடா இருந்தது. அதுதான் மற்ற ஆடுகளுக்கெல்லாம் காவல்போல இருந்தது. ஒரு நாள் அதிகாலையில் சந்தனத்தேவர் தன் வயல்காட்டுக்கு வரும்போது முத்து அவரை குத்தித் தூக்கியெறிந்துவிடுகிறது. இதில் அவமானப்பட்டுப்போன சந்தனத் தேவர், ராசுக் கோனாரிடம் அந்த கடாவை தன்னிடம் விற்கும்படி சொல்கிறார். ஆனால், ராசுக் கோனார் மறுக்கவே, தன் நிலத்தின் ஒரு பகுதியை எழுதிக்கொடுத்து அந்தக் கடாவை வாங்குகிறார் சந்தனத் தேவர்.


கடாவை வாங்கியவுடனேயே அதனை வீட்டிற்கு இழுத்துப்போய், அதனை வெட்டி குழம்பு வைத்துவிடுகிறார். அந்தக் குழம்பை அவசர அவசரமாக சோற்றில் கொட்டி, பிசைந்து வாய்க்கருகில் எடுத்துப்போகும்போது அதில் விபூதி வாடை அடிக்கிறது. அங்காளம்மன் கோவிலின் விபூதி வாடை. எந்த அங்காளம்மன் கோவிலில் சந்தனத்தேவர் திருடிவிட்டுவந்தாரோ, அந்த அங்காளம்மன் கோவிலின் விபூதி வாடை. “தின்னுடா, தின்னுடா” என்று அசரீரியும் ஒலிக்கிறது. அடுத்த நாள் போய்ப்பார்த்தால் சந்தனத்தேவர் ரத்தம் கக்கிச் செத்துக்கிடப்பார். சொட்டாங்கல்லில் இந்தப் பகுதியை படித்தபோது மெய்சிலிர்த்தது.


இதேபோன்ற ஒரு காட்சி மாரி செல்வராஜின் கர்ணனிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பாக இறந்துபோன கர்ணனின் தங்கை திடீரென அவளது தந்தையின் கனவில் வருகிறாள். அவளைப் பார்த்ததும் தந்தை கதறி அழுகிறார். மற்றொரு பெண்ணைக் கட்டிக்கொடுக்க தன்னிடம் பணம் இல்லையே என்று மருகுகிறார். அப்போது இறந்துபோன அந்த பெண், ‘வீட்டிற்குள்ளேயே பணத்தை புதைத்துவைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொள்’ என்கிறாள்.


தூக்கத்திலிருந்து விழிக்கும் தந்தை சாமி வந்தவரைப் போல ஆடி, விஷயத்தைச் சொல்கிறார். கர்ணனின் தாயும் சகோதரியும் இதை நம்பி, வீட்டின் தரையைத் தோண்டச் சொல்கிறார்கள். கர்ணன் மறுக்கிறான். அவனிடம் மன்றாடி, தோண்டச் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழங்கால் அளவுக்கு வீட்டிற்குள் தோண்டிய பிறகும் ஒன்றும் கிடைக்கவில்லை.


சலித்துப்போன கர்ணன் எல்லோரையும் ஏசியபடி, மண்வெட்டியைத் தூக்கிப்போட, பணம் நிறைந்த உண்டியல் ஒன்று உடைந்து சிதறுகிறது. செத்துப்போன மகள் தந்தையின் கனவில் வந்து சொன்னது உண்மையாகிவிட்டது. ஒரு சமூகக் கதை, இந்தக் காட்சியில் திடீரென தொன்மக் கதையாகிவிடுகிறது. திரையரங்கில் இந்தக் காட்சியைப் பார்த்தபோது மெய்சிலிர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *