• Fri. Apr 26th, 2024

40 பார்களுக்கு சேர்த்து டெண்டர் போட்ட ஒரே நபர்

தமிழகத்தில் பார் டெண்டர் விடுவதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த நிலையில், 40 பார்களுக்கு சேர்த்து ஒரே நபர் டெண்டர் விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மது மற்றும் ஆயத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவினாலும், கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையான நபராகவே இருந்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே, கடந்த ஆட்சியின் போது ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் இருந்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.

இந்த சூழலில், டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியமைந்து 8 மாதங்களுக்குள் திமுக அமைச்சர் மீது முறைகேடு புகார் எழுந்திருப்பது ஆளும் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.


இதனிடையே, தன் மீதான புகாருக்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் வழங்க வந்த யாரையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. யாரெல்லாம் முறையாக படிவங்களை அனுப்பி உள்ளார்களோ அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆன்லைனிலும், நேரிலும் முறையாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், அந்த நபரிடம் இருந்து ஏராளமான விண்ணப்பங்களை பறிமுதல் செய்த சக ஒப்பந்ததாரர்கள், காக்களூரில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக டெண்டரை எடுக்க வந்தவர்களுக்கும் விண்ணப்பத்தை வழங்க மறுத்த அதிகாரி, ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும், சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே, பைகளில் விண்ணப்பங்களை கொடுத்து அனுப்புவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சமரசம் செய்த போலீசாரிடம், விண்ணப்பம் வழங்குவதில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத டாஸ்மாக் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

பார் டெண்டர் விடுவதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், தற்போது வெளியான வீடியோ ஆளும் திமுக அரசு மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்வதாக அமைந்துள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினே தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உண்மை வெளிப்படும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *