கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி, வாத்து போன்ற கால்நடை வளர்ப்போருக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்பு பயிற்சி முகாமைத் தொடங்கியுள்ளது.
‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் செப்.8ஆம் தேதி இந்த முகாமானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முகாம் மூலம் மொத்தம் 180 கால்நடை வளர்ப்போருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 30 பேருக்கு 20 நாட்களில் 160 மணி நேரப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி, 6 மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இந்தப் பயிற்சியில், ஆடு மற்றும் மாடு வளர்ப்புக்கான நவீன தொழில்நுட்பங்கள், கால்நடைகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிப்பது, லாபகரமான வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி, முயல், வாத்து வளர்ப்பு மற்றும் கறிக்கோழி வளர்ப்பு போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
பயிற்சி பெறுபவர்களுக்கு வங்கிக் கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும், வெற்றிகரமாக இயங்கும் பண்ணைகளுக்கு நேரில் சென்று களப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இது, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கால்நடைப் பண்ணைகள் அமைக்க விரும்புவோருக்கு மானியமும் கிடைக்கும். நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ரூ.25 லட்சம் வரையிலும், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலும், பன்றி வளர்ப்புப் பண்ணை அமைக்க ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் பெறலாம்.
இத்திட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற, அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் தீவன சேமிப்பு, வைக்கோல் ஊறுகாய்ப்புல், கலப்பு உணவுத் தீவனத் தொகுதி போன்ற வசதிகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய பண்ணைகள் அமைக்க விரும்புவோர் https://www.trilda.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கால்நடை வளர்ப்போருக்கு ராணிப்பேட்டையில் பயிற்சி முகாம்
