• Sat. Mar 22nd, 2025

சிவகாசி அருகே விபரீதம்…மனைவி கண்டித்ததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கணவர்…..

ByKalamegam Viswanathan

Sep 13, 2023

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (26). இவரது மனைவி விஜி (23). இவர்களுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பேச்சியப்பன் வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தார்.

கணவர் வேலைக்குச் சென்று சம்பாதிக்காததால், குடும்பத்தை நடத்துவதற்கு விஜி மிகுந்த கஷ்டப்பட்டுள்ளார். இதனால் அவர் பேச்சியப்பனை மது குடிக்கக் கூடாது, ஒழுங்காக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கண்டித்துள்ளார். இதனையடுத்து கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த பேச்சியப்பன் நேற்றிரவு, தனது வீட்டின் அருகேயுள்ள ரேசன் கடை முன்பு, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்