தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கரூரில் பாரம்பரிய பலகாரமான அதிரசம், கைமுறுக்கு தயாரிப்பு சூடு பிடித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் ‘ஸ்பெஷல் அதிரச கடை” 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு பாரம்பரியமான முறையில் கை முறுக்கு, அதிரசம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றனர். தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில் கை முறுக்கு, அதிரசம் பலகாரம் தயாரிப்பு சூடு பிடித்துள்ளது.
பாரம்பரியமான முறையில் கடலை மாவு, அரிசி, மாவு, எள், மிளகாய் தூள், உள்ளிட்ட உடலுக்கு வலுசேர்க்க கூடிய பொருட்களை கொண்டு கை முறுக்கு செய்கின்றனர். அதேபோல அதிரசம் வெல்லம், பச்சை அரிசி, சுக்கு, ஏலக்காய், வெண்ணெய் சேர்த்து தயார் செய்கின்றனர். இதனால் உடலுக்கு கேடு இல்லை என தெரிவிக்கின்றனர். கடைகளில் கலர் பலகாரங்கள் விற்பனை செய்வதால் மக்கள் அதை நாடி செல்கின்றனர்.
பாரம்பரியமான முறுக்கு, அதிரசத்துக்கு மவுசு குறைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையின் போது தயார் செய்யப் படும் இனிப்புகள், கார வகைகள் விலை அதிகரித்து வருகிறது.
இதனால் விலை குறைவாக கிடைக்கும் பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் கை முறுக்கு, அதிரசத்தை நோக்கி மக்கள் வருகின்றனர். பாரம்பரிய பலகாரங்களுக்கு மவுசு குறைந்தாலும், தற்போது மக்கள் பாரம்பரிய பலகாரத்தை நோக்கி வருகின்றனர் . இங்கு பலகாரங்கள் அனைத்தும் பாரம்பரியமான முறையில் தயார் செய்யப்படுவதால் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.