• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சத்திரப்பட்டியில் பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழா..,

ByRadhakrishnan Thangaraj

Jul 29, 2026

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் மற்றும் சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி முளைக்கொட்டு திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த செவ்வாய் கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது. 3 கிராமங்களில் அமைந்துள்ள ஜெயமாரியம்மன்,
யோக மாரியம்மன், செல்வ மாரியம்மன், செல்ல மாரியம்மன், சடை மாரியம்மன், ஆகாச மாரியம்மன் கோயில்களில் வேண்டிக் கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரிகளை தங்கள் வீடுகளில் வளர்த்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். சங்கரபாண்டியபுரத்தில் இருந்து, சமுசிகாபுரம், சத்திரப்பட்டி நடுத்தெரு, தெற்கு தெரு, ஆலங்குளம் சாலை, நத்தம்பட்டி சாலை உள்ளிட்ட பிரதான வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஆடல் பாடலுடன் ஊர்வலமாக வந்த கிராமத்தினர், துரைமடம் விநாயகர் கோயில் எதிரே இருந்த கிணற்றில் முளைப்பாரியை கரைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

மேலும் 5 நாட்களும் விடிய விடிய கண்ணாடி சப்பரம், தண்டியல் சப்பரம், பூச்சப்பரங்களில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். இந்த திருவிழாவை காண சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த திருவிழா ஏற்பாடுகளை மருத்துவ துணி உற்பத்தி நிலையங்கள், விசைத்தறி கூடங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.