விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் மேலஒட்டம்பட்டி, சுப்ரமணியபுரம், சல்வார்பட்டி, சேது ராமலிங்காபுரம், சிப்பிப்பாறை, அன்பின் நகரம், அன்னபூரணியாபுரம், புலிப்பாறைப்பட்டி, மேலச்சத்திரம், மார்க்கநாதபுரம், பாறைப்பட்டி, அலமேலு மங்கைபுரம், சாமிநாத புரம், உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடுவதற்கு வசதியாக உழவு போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோடை மழை முழுமையாக கைவிட்டதால் மானாவாரி பயிரான மக்காச்சோளம் ,பருத்தி, சூரிய காந்தி, ஆகியவை பயிரிட படவில்லை. கிணற்று பாசனம் மூலம் குறைந்த அளவு சுரைக்காய், புடலங்காய் ,கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பூசணி ஆகிய காய்கறி பயிர்கள் மட்டும் பயிரிடப்பட்டு இருந்தன. கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதால் மக்காச்சோளம் பயிரிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வெம்பக்கோட்டை தாலூகாவில் உள்ள 1800 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடபட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அன்பின் நகரம் விவசாயி வீர முருகன் கூறியது
மக்காச்சோளம் இப்பகுதியில் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. எப்போதும் இரண்டு முறை நிலத்தை உழவு பணி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு மழை பெய்ய தாமதமானதால் மூன்று முறை உழவு போடப்பட்டுள்ளது.

தற்போது கிணற்றில் உள்ள தண்ணீரை நம்பி மக்காச்சோளம் விதைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை பெய்தால் மட்டுமே பயிரை காப்பாற்ற முடியும் அதற்கு வருணபகவான் உதவ வேண்டும் என கூறினார்.








