• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை நியாயம் கேட்ட வாடிக்கையாளரிடம் மிரட்டல் வாக்குவாதம்..,

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த மணி, தனது குழந்தைகளுக்காக சோழவந்தான் மார்கெட் பகுதியில் உள்ள பலசரக்குக் கடையில் பிரபல நிறுவனத்தின் இரண்டு அரை கிலோ ஐஸ்கிரீம் பாக்சுகளை வாங்கியுள்ளார்.

வீட்டிற்குச் சென்று பாக்சை திறந்தபோது, ஐஸ்கிரீம் கெட்டுப்போன நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது.

​இதையடுத்து, அதன் தயாரிப்புத் தேதியைச் சரிபார்த்தபோது, அந்த ஐஸ்கிரீம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே காலாவதியானது (Expired) தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணி, உடனடியாக பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அவர்களை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார்.

​அப்போது பேரூராட்சி அதிகாரிகளின் முன்பே கடை உரிமையாளர் “பொருட்களை வாங்கும்போது தேதியைப் பார்த்து வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு” எனக் கூறி, கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், ஆதாரமாக இருந்த காலாவதியான ஐஸ்கிரீம் பாக்சையும் வாடிக்கையாளரின் கையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டனர்.

​சம்பவ இடத்திலிருந்த பேரூராட்சி அதிகாரிகள், “பொருட்களை விற்பனை செய்யும் முன் காலாவதி தேதியைச் சரிபார்ப்பது கடைக்காரர்களின் கடமை” என எச்சரித்தனர்.

இருப்பினும், “நிறுவனம் சப்ளை செய்யும்போதே இப்படித்தான் கொடுத்தது” எனக் கூறி கடை உரிமையாளர்கள் அலட்சியமாகப் பதிலளித்தனர்.

​இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை உணவுப் பாதுகாப்புத் துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக ஆய்வு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.