நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை திரவியம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கேட்டு நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் இன்று காலை நாகர்கோயில் தக்கலை குளச்சல் குழித்துறை உட்பட 21 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
நாகர்கோயில் வடசேரி சந்திப்பில் திருவனந்தபுரம்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பின்னர் நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் படம் பொருத்தப்பட்ட இரு உருவ பொம்மைகள் கொண்டுவரப்பட்டு பாஜகவினர் எரிப்பு உருபொம்மை போலீசார் கைப்பற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.