• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

கனமழையால் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

Byவிஷா

May 29, 2025

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாள் முன்னதாக கடந்த 24-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி நள்ளிரவு முதல் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 6 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே தவளை மலை பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் உள்ள மூன்று ராட்சத பாறைகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் பகல் நேரங்களில் மட்டும் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். அவசர தேவைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை வாகனங்கள் மட்டும் பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் உள்ளூர் வாகனங்கள் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் அனுமதிக்கப்படும். இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்ததாவது..,
“ஊட்டி – கூடலூர் சாலையில், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அங்கு பணியில் உள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி வாகனங்களை வைத்து நிலச்சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற தயார் நிலையில் உள்ளனர். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால், பொதுமக்கள் உடனுக்குடன் 1077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் அண்டை மாநிலங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க அறிவுரை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தற்போதைக்கு முதுமலை, மசினகுடி சாலைகளை ஊட்டி வர பயன்படுத்தலாம். மேலும் ஏற்கனவே, ஊட்டி – கூடலூர் வழித்தடத்தில் உள்ள ஃபைன் பாரஸ்ட், பைக்காரா, சூட்டிங் மட்டம் ஆகிய சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன” என்றார்.
பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் சாலைகளில் மரங்கள் விழுதல், மண்சரிவு, மின் துண்டிப்பு, வீடு சேதம் உட்பட்ட இடர்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. தேசிய, மாநில பேரிடர் தடுப்பு படையினருடன் தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைக்கு இதுவரை, 19 வீடுகள் சேதமாகியுள்ளன.
கடந்த 6 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் விழுந்த 100க்கும் மேற்பட்ட மரங்களை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றி உள்ளனர். அபாயகர மரங்கள் உள்ள பகுதிகளில் சாலைகளில் விழுந்த மரங்களை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,
‘நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளது. கடந்த 5 நாட்களில் மாவட்டம் முழுவதும் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. பேரிடர் மீட்பு பணிக்காக ஈரோடு, திருப்பூரில் இருந்து 25 தீயணைப்பு வீரர்கள் நீலகிரி வந்துள்ளனர். அவர் கூடலூரில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.