நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில், 21.5 செ.மீ. , மழை பதிவானது. அப்பர் பவானி, எமரால்டு, கூடலூர், பந்தலூர் பகுதிகளில், 10 செ.மீ., மேல் மழை பதிவானது. மழைக்கு ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத் துறையினர் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.
தோட்டக்கலை துறைக்கு சொந்தமான, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டீ பார்க், மரவியல் பூங்காக்கள் நேற்று மதியம் திடீரென மூடப்பட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் கூடலூர் ஊசி மலை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். ஊட்டியில் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ‘நீலகிரியில் மழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேசிய, மாநில பேரிடர் குழுவினர் மழை பாதிப்பு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர். 26 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
கனமழை எதிரொலி : நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்
