• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அகழாய்வில் ‘தர்பீடோ’ குடுவை வடிவப் பானை ஓடுகள் கண்டெடுப்பு..,

ByK Kaliraj

Mar 18, 2026

வெம்பக்கோட்டை – அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் மூன்று கட்டங்களாக அகழாய்வு செய்யப்பட்டது.

இந்த அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தங்க மணிகள், செவ்வக விளையாட்டுப் பொருட்கள், நுண்கற்காலக் கருவிகள், பாசிமணிகள், சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள், தாயக்கட்டைகள், சூது பவளமணி, செப்பு காசுகள், என பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சுடுமண் முத்திரைகள் ஏராளமாக கிடைத்த போது இப்பகுதியில் உறுதியாக கடல் வழியாக வாணிபம் நடந்திருக்கலாம் என நம்பப்பட்டது.

இந்த மூன்று கட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களையும், பானையோடுகளையும் தரம் வாரியாக பிரிக்கும் பணியின்போது ‘தர்பீடோ’ (Torpedo Jar) எனப்படும் குடுவை வடிவ பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஓடுகள் ரோமானிய/மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து ஆலிவ் எண்ணெய், ஒயின் போன்ற திரவப் பொருட்களை கொண்டு வர பயன்படுத்தப்பட்டவை என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்பகுதியிலும் கிடைத்த தர்பீடோ குடுவை ஓடுகள் மூலம் கடல் வழியாக வைப்பாற்று ஆற்றங்கரையில் வாணிபம் செய்தது சான்றாக கிடைத்துள்ளதால் கடல் வாணிபம் நடைபெற்றதை உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது பண்டைய தமிழர்களின் கடல் வாணிபத் திறனை உறுதிப்படுத்தும் முக்கிய கண்டுபிடிப்பாகும்.
இந்நிலையில் கடல் வாணிபத்தின் சான்றாக ‘தர்பீடோ’ (Torpedo Jar) குடுவை வடிவ பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது பண்டைய தமிழ் நில வாணிபர்கள் குறித்த வரலாற்றுக்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டம் – விஜய கரிசல்குளத்தில் நடைபெற்றுவந்த மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் மூலம் ‘தர்பீடோ’ என்ற குடுவை வடிவப் பானையோடுகள் கிடைத்துள்ள செய்தி, தொல் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் முக்கிய மைல்கல்!

திரைக்கடலோடியும் திரவியம் தேடிய பண்டைய தமிழ் நில வாணிபர்கள் குறித்த வரலாற்றுக்கு மற்றுமொரு சான்றாகக் கிடைத்திருக்கும் இந்த அரிய குடுவை ஓடுகள், வைப்பாறு நதிக்கரையைச் சார்ந்த பகுதிகளில் செழித்திருந்த தமிழரின் பன்னாட்டு வாணிபத் தொடர்புகளை உறுதி செய்கின்றன. தொன்மை மிகுந்த ‘தமிழ் வணிக பெருவழி’ குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் இந்த ‘தர்பீடோ’க்கள் விளங்குகின்றன எனக் கூறியுள்ளார்.