• Thu. Apr 25th, 2024

நாளை திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா 01.02.2022 முதல் 10.02.2022 முடிய நடைபெறவுள்ளது. வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவானது கடந்து 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக களையிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டாவது தெப்பத்திருவிழா நடைபெறுமா என்ற ஏக்கத்தில் பக்தர்களும், பொதுமக்களும் இருந்துள்ளனர். அவர்களின் குறையை போக்கும் விதமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிப்பின் படி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தெப்பத்திருவிழாக்கள் சம்மந்தமான அனைத்து நிகழ்வுகளும் உள்திருவிழாக்களாக திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெப்பத்திருவிழா நாளை காலை 10.45 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

மேலும் திருவிழா சமயத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி புறப்பாடின் போது பக்தர்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி புறப்பாடுகள் நிகழ்வுகள் அனைத்தும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருக்கோயிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் மட்டுமே நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவிழாவின் 10-வது நாள் தெப்ப உற்சவத்தையொட்டி ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரான தெப்ப மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது ஏராளமான பக்தர்கள் தெப்ப மிதவையில் இணைக்கப்பட்ட வடத்தினை பயபக்தியுடன் இழுப்பார்கள். தெப்பகுளத்திற்குள் 3 முறை தெப்ப மிதவையானது வலம் வரும். இதேபோல இரவில் மின்னொளியில் வானவேடிக்கைகளுடன் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று அரோகரா கோஷம் முழங்க தெப்ப மிதவையின் வடத்தை பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள். இதனை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வளாகத்தில் சூரசம்கார லீலை நடைபெறும். ஆனால் அரசின் நெறிமுறைக்கு உட்பட்டு தெப்பமுட்டுதள்ளுதல், தேரோட்டம், தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமான தெப்பம் வலம்வருதல், சன்னதி தெருவில் சூரசம்காரம் லீலை தவிர்க்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *