• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இன்று உலக காற்று தினம் (ஜூன் 15)

ByKalamegam Viswanathan

Jun 14, 2023

தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக இன்று (ஜன் 15) உலக காற்று தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது. உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் துவங்கி குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை பல வகைகளில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது காற்று. உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம். உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரிய மில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
அதே வேளையில் உயிரினங்கள், பிராணவாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. உயிரினங்களின் இன்றியமையா தேவையான காற்று, இன்று பல வழிகளிலும் மாசு அடைந்திருக்கிறது. வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கு வாடை எனவும், தெற்கில் இருந்து வீசும் காற்றுக்கு சோழகம் எனவும், கிழக்கில் இருந்து வீசும் காற்றுக்கு கொண்டல் என்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றுக்கு கச்சான் எனவும் வீசும் காற்றுக்கும் கூட பெயர் வைத்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம். காற்றுக்கு சூரியக் காற்று, கோள் காற்று, வன் காற்று, சூறாவளி காற்று என அறிவியல் ரீதியான பெயர்களும் உள்ளன. சூரியனில் இருந்து வெளியேறும் வளிமங்கள் சூரியக் காற்று எனவும், கோள்களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்கள் வெளியேற்றத்தை கோள் காற்று எனவும், குறைந்த நேரத்தில் மிக வேகமாக வீசும் காற்று வன் காற்று எனவும், நீண்ட நேரம் நீடிக்கும் பலமான காற்று சூறாவளி எனவும் அழைக்கப்படுகிறது.
பூமியை சூழ்ந்துள்ள காற்று மண்டலம் 78சதவீதம் நைட்ரஜனாலும், 21சதவீதம் ஆக்சிஜனாலும், 1சதவீதம் கரியமில வாயுவாலும், எஞ்சியவை இதர வாயுக்களாலும் நிறைந்துள்ளது. கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றும் மரங்கள் காற்றின் தோழன். அந்த தோழனை வேரறுப்பதால் நச்சு வாயுக்கள் காற்று மண்டலத்தில் பரவுகின்றன. மேலும் பெருகிவரும் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றில் கலப்பதால் நச்சுப் படலத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் நல்ல காற்று மாசடைந்து நச்சுக் காற்றாக மாறுகிறது. இதை சுவாசிப்பதன் மூலம் காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல் காசநோய், ஆஸ்துமா, நுரையீரல் புற்று, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் உருவாகின்றன. இது மட்டுமின்றி பூமியில் உள்ள நீர் நிலைகள், தாவரங்கள், புராதன நினைவுச் சின்னங்கள், கட்டடங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதற்கு உதாரணமாக தாஜ்மஹாலை சொல்லலாம். பளிங்கு கல் மாளிகையாக ஜொலித்த தாஜ்மஹால் மாசுக் காற்றின் விளைவால் மஞ்சள் மஹாலாக மாறி வருகிறது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியான தொழிற்சாலைகள் வெளியேற்றும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றால் மண்ணில் அமில மழை பெய்வதன் மூலம் மண் எல்லாம் மலட்டுத் தன்மையை கொண்டதாக மாறி வருகிறது. அதிவேக விமானங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் ஆக்ஸைடும், குளிர்சாதனப் பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் வாயுக்களாலும் ஓசோன் படலம் இன்று ஓட்டையாகிப் போனது. இந்த நிலை நீடித்தால் மண்ணில் உயிரினங்கள் வாழ்வது பெரும் சிக்கலாகிப் போகும். இதனை மாற்ற நாமும் இயன்றதை முயலலாம். குப்பைகளையும், நெகிழிப் பொருட்களையும் எரிப்பதை தவிர்ப்பது, தனிநபர் வாகன பயன் பாட்டை குறைத்து கொண்டு பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, தூசிகளை காற்றில் கலக்காதவாறு சுத்திகரிப்பு செய்வது, சொகுசு சாதனங்களின் தேவைகளை குறைப்பது போன்றவற்றினை மேற்கொண்டு அதன்மூலம் நல்ல காற்றை தக்கவைத்துக்கொள்ளலாம்.

மனித நாகரீகம் வளர வளர இயற்கையும் சீர்கேடு அடைய ஆரம்பித்துள்ளது. இயற்கையை சீரழித்தது, உயிரினங்களில் மனிதன் மட்டும்தான். மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனைநிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து, இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பல நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது.

உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம்வேண்டியவைதான். ஆனாலும் உணவின்றி சில நாட்களும், நீரின்றி சிலமணிநேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. எனவே உயிர் வாழ்க்கைக்கு தூய காற்று இன்றியமையாதது.
விட்டுக்கு ஒரு மரம் நடுவோம் !!! காற்று மாசடைவதை தடுப்போம் !!
நம் பூமியையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்க, நம் அடுத்த தலைமுறை சுத்தமான காற்றை சுவாசிக்க இன்றே உறுதி ஏற்போம்.