உலக சுகாதார நிறுவனம், உயிர்காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வக் குருதி தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதியை, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், ஏபிஓ இரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும். கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner)( ஜூன் 14, 1868 ) ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் ஆவார். 1900 ஆம் ஆண்டில் லாண்ட்ஸ்டெய்னர் இரு வேறு மனிதர்களின் இரத்தத்தைக் கலக்கும் போது சில உறைவதையும் சில உறையாதிருப்பதையும் கண்டுற்றார். மேற்கொண்டு இதை ஆராய்ந்ததில் அவர் ABO குருதி வகை அமைப்பைக் கண்டறிந்து லாண்ட்ஸ்டெய்னர் விதிகள் என அறியப்படும் ஒப்பற்ற இரு விதிகளை அளித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடிப்பே நியூயார்க்கில் நடத்தப்பட்ட முதல் வெற்றிகரமான குருதியேற்றத்திற்கு வழிகோலியது. குருதி வகைகளைக் கண்டறிந்தமைக்காக இவர் உலகெங்கிலும் அறியப்படுகிறார். இதற்காக 1930 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இவர் 1909 ஆம் ஆண்டு இர்வின் பாப்பருடன் இணைந்து போலியோ வைரசையும் கண்டறிந்தார்.
உலகச் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு, உலக குருதிக் கொடையாளர் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் உலகக் குருதி மாற்று சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் உலகக் குருதி கொடையாளர் தினத்தைத் தாங்குகிறது. உயிருக்கு ஆபத்தான நிலைகளிலும், சிக்கலான மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையின் கீழும் இருக்கும் லட்சக் கணக்கான நோயாளிகள் இரத்தம் மற்றும் இரத்தப் பொருள் மாற்று சிகிச்சையால் காப்பாற்றப்படுகிறார்கள். தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்பிலும், மனிதனால் மற்றும் இயற்கையால் ஏற்படும் பேரிடர்களின் போதும் குருதிக் கொடைக்கு ஓர் உயிர் காக்கும் பங்கு உள்ளது. தன்னார்வ மற்றும் இலவசக் கொடையாளர்களால் மட்டுமே தொடர்ந்து இரத்தம் மற்றும் இரத்தப்பொருள் போதுமான அளவில் விநியோகம் ஆகமுடியும்.
யாரோ ஒருவருக்காக அவர் அருகில் இருங்கள். இரத்தம் அளியுங்கள். வாழ்வைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் ஒருவர் பேரில் ஒருவர் அக்கறை கொள்வதிலும், சமூகப் பிணைப்பை ஏற்படுத்துவதிலும், ஓர் இணைந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் தன்னார்வக் கொடை அமைப்பு வகிக்கும் பங்கில் இந்த ஆண்டு கருத்து வாசகம் கவனத்தை ஈர்க்கிறது. பணமோ, அதற்கு இணையான பொருளோ பெறாமல் இலவசமாக தன்னார்வத்தால் குருதி, ஊனீர், அல்லது பிற குருதிசார் பொருட்களை அளிப்பவரே குருதிக் கொடையாளர் ஆகும். நோய் ஆபத்து குறைந்த மக்களிடம் இருந்து தன்னார்வத்துடன் இலவசமாக பெறும் இரத்தத்தால் போதுமான பாதுகாப்பான இரத்தம் நோயாளிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும். ஒருவர் சான்றிதழ் பெற்ற இரத்த வங்கியிலோ, இரத்த முகாமிலோ அல்லது குருதி அலைபேசி வழியாகவோ குருதிக்கொடை அளிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 112.5 மில்லியன் அலகு இரத்தம் கொடையளிக்கப்படுகிறது. இருப்பினும் இரத்த மாற்று தேவைப்படும் பல நோயாளிகளுக்கு இரத்தமும் இரத்தப் பொருட்களும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. தன்னார்வத்துடனும், இலவசமாகவும் இரத்தம் வழங்கும் இரத்தக் கொடையாளர்கள் மூலமே பாதுகாப்பான நிலயான இரத்த விநியோகம் நடைபெறுகிறது. 62 நாடுகளில் இவ்வழியாகவே 100% இரத்தமும் கிடைக்கிறது. இலவசமாக இரத்தம் அளிக்கும் தன்னார்வலர்களே பாதுகாப்பான குருதிக் கொடையாளர்கள். ஏனெனில் இரத்தத் தொற்று இவர்கள் மத்தியில் மிகக் குறைவாக இருக்கிறது. எளிய பலன் அளிக்கும் சிகிச்சை இருக்கும் போது மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை. தேவையற்ற இரத்த மாற்றில் எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி, எதிமறை மாற்று போன்ற ஆபத்துக்களுக்கு நோயாளிகள் ஆளாக்கப்படுகின்றனர்.
கொடையளிக்கப்பட்ட குருதியை 35-42 நாட்களே பாதுகாத்து வைக்க முடியும். ஆகவே இரத்த வங்கிகளில் புதுக் குருதி தொடர்ந்து இருப்பிற்கு கொண்டு வரப்பட வேண்டும். 18-65 வயது வரை உள்ளவர்களே ஆரோக்கியமான கொடையாளர்கள். ஒரு அலகு இரத்தம் பல சார் பொருட்களாகப் பலருக்குப் பயன் படும். கொடையளிக்கப்பட்ட இரத்தம் எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி பி, சி மற்றும் மேகநோய்த் தொற்று சோதனைகள் செய்த பின்னரே மாற்று சிகிச்சைக்கு அளிக்கப்பட்ட வேண்டும். தேசியக் குருதி மாற்றுப் பேரவை, தன்னார்வக் குருதிக் கொடை, பாதுகாப்பான குருதி மாற்று சிகிச்சை, இரத்த வங்கிகளுக்கு உள்கட்டுமானம், மனித வள மேம்பாடு, இந்திய இரத்தக் கொள்கை ஆகியவற்றின் மையமாகச் செயல்படுகிறது.
ஒவ்வொரு விநாடியும், யாருக்காவது, எங்கோ இரத்தம் தேவைப்படுகிறது. யாரோ ஒருவருக்காக அவர் அருகில் இருங்கள். இரத்தம் அளியுங்கள். வாழ்வைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.