இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக திகழ்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் 1967 இல் இருந்து 1969 ஆண்டில் அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது , காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்தது. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார். இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார். பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார். ஜாகிர் உசேன், இந்திய அரசின் உயர்நிலைக் கல்வி வாரியத்தின் தலைவராக இருந்து ,உயர்நிலைக் கல்விச் சீர்திருத்தத்திற்கான பலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார். கல்வித் துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி ,இந்திய அரசு இவருக்கு 1954-ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963-ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.தன் நாட்டுக்காக அயராத பணியாற்றிய ஜாகிர் உசேன் பிறந்த தினம் இன்று..!








